மலேசிய விமானம் காணாமல் போனதற்கான காரணங்களை அறிய முடியாமலே போகலாம் : மலேசிய அதிகாரிகள்!!

312

Flight

விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்ற மர்மத்தை அறிய முடியாமலே கூட போகலாம் என்று மலேசிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மலேசியக் காவல்துறைத் தலைமை அதிகாரி காலித் அபூபக்கர், செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இந்த விமானம் காணாமல் போனது குறித்த கிரிமினல் விசாரணை நீண்டுகொண்டே போகலாம், இவ்விசாரணையில் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் ஆராயவேண்டியிருக்கிறது என்றார்.

ஆனால் விசாரணையின் முடிவில் இந்த சம்பவத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பதை நம்மால் அறிய முடியாமல் போகலாம் என்றும் அவர் கூறினார்.

இதுவரை இந்த விமானத்தின் விமானிகள் மற்றும் அந்த விமான ஊழியர்களின் குடும்பத்தினரிடம் சுமார் 170க்கும் மேற்பட்ட முறைகள் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன என்று கூறிய அவர், மேலும் கூறப் போனால், விமானத்திற்குள் எடுத்துச் செல்லப்பட்ட சரக்குப் பொதிகள், வழங்கப்பட்ட உணவு போன்றவைகளில் ஏதேனும் நாச வேலை நடந்திருக்கிறதா என்று கூட ஆராயப்பட்டுவிட்டது என்றார்.

இதனிடையே விமானத் தேடல் முயற்சி புதன்கிழமையன்றும் தொடர்கிறது என்று புதிதாக இந்த விமானத்தைத் தேடும் பணியை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள கூட்டு பல்நிறுவன ஒருங்கிணைப்பு மையம் கூறியிருக்கிறது. அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து இந்த மையம் இயங்குகிறது.

புதனன்று நடத்தப்படும் இந்தத் தேடல் முயற்சி, சுமார் 2.21 லட்சம் சதுர கிமீ பரப்பளவில் நடத்தப்படும் என்று கூறிய அந்த மையம், ஆனால், கடல் பரப்பில் நிலவும் மூடுபனியும், ஆங்காங்கே வீசும் புயற்காற்றும், மேகமூட்டமும் இந்தத் தேடல் முயற்சியைப் பாதிக்கலாம் என்று கூறியது.

இதனிடையே, மலேசியப் பிரதமர் நஜிப் ரஸாக், தேடல் முயற்சிகள் குறித்து விவாதிக்க அவுஸ்திரேலியா விரைகிறார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்கு வந்தடையும் ரஸாக், கூட்டு பல்நிறுவன ஒருங்கிணைப்பு மையத்தினைப் பார்வையிடுவார்.

பின்னர் அவர் அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட்டையும், மையத்தின் தலைவராக இருக்கும், ஓய்வு பெற்ற விமானப் படைத் தளபதி ஆங்கஸ் ஹூஸ்டனையும் சந்திப்பார்.

-BBC தமிழ்-