மலேசிய விமானம் மாயமானதில் பயணிகளுக்கு தொடர்பா?

252

missing

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானதில், அதில் சென்ற 227 பயணிகளில் யாருக்கும் தொடர்பு இல்லை என்று மலேசிய பொலிஸ் தலைவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கடந்த மாதம் 8ம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நகருக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்றது.

அதில் 227 பயணிகள், 12 ஊழியர்கள் இருந்தனர். விமானம் 8ம் திகதி அதிகாலை வியட்நாம் வான்வெளியில் காணாமல் போனது. அதன்பின் விமானம் கடத்தப்பட்டதா, சதி ஏதாவது நடந்ததா, விமானி தற்கொலை எண்ணத்துடன் விமானத்தை கடலில் மூழ்கடித்தனரா அல்லது பயணிகளில் யாராவது மனநிலை பாதிக்கப்பட்டோ அல்லது பயணிகள் போர்வையில் தீவிரவாதிகள் யாராவது விமானத்தை கடத்தி அழித்தனரா போன்ற பல கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.

இந்நிலையில், விமானத்தில் சென்ற 227 பயணிகளை பற்றிய முழு விவரங்களையும் திரட்டும் பணியில் மலேசிய பொலிசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். பயணிகளில் யாருக்காவது குற்றப் பின்னணி உள்ளதா, பயணிகளில் யாராவது மனநிலை பாதிக்கப்பட்டிருந்தனரா என்றெல்லாம் ஒவ்வொருவரின் பின்னணி குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.

இதில் 227 பயணிகளில் யாருக்கும் சந்தேகப்படும்படி பின்னணி எதுவும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இத்தகவலை மலேசிய பொலிஸ் தலைவர் இன்ஸ்பெக்டர் ஜென்ரல் காலில் அபுபக்கர் நேற்று தெரிவித்தார்.

இதுகுறித்து அபு பக்கர் கூறியதாவது, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 14 நாடுகளை சேர்ந்த 227 பயணிகள் சென்றுள்ளனர். அவர்களில் 153 பேர் சீனாவை சேர்ந்தவர்கள்.

இந்தியர்கள் 5 பேர் இருந்தனர். விமானத்தில் சென்ற பயணிகளின் உறவினர்கள் 170 பேரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. விமானி , துணை விமானி, 12 ஊழியர்களின் உறவினர்களிடம் விசாரணை நடந்தது.

விமான பயணிகளின் உணவில் விஷம் கலந்து ஒட்டுமொத்த பேரும் இறப்பதற்கு சதி ஏதாவது நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. அதற்காக விமான பயணிகளுக்கு உணவு தயாரித்தவர்களிடமும் விசாரணை நடந்தது.

அதில் சந்தேகப்படும்படி எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, விமானம் மாயமானதில் பயணிகளுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. எனினும், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அபு பக்கர் கூறினார்.