வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!!

722


போராட்டத்திற்கு அழைப்பு..



வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக எதிர்வரும் 10ஆம் திகதி வவுனியா வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளருமான ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.



வவுனியா வடக்கு பகுதியில் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்கள் தொடர்பில் வடக்கு – கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் கூட்டம் ஒன்று வவுனியா வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது.




குறித்த கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா (ஈபிஆர்எல்எப்), ஜி.ரி.லிங்கநாதன் (புளொட்), வவுனியா வடக்கு பிரதேசசபைத் தலைவர் தணிகாசலம் (தமிழரசுக் கட்சி),


புதிய மாக்சிச லெனினச கட்சியைச் சேர்ந்த நி.பிரதீபன், வவுனியா வடக்கு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஜனநாயக போராளிகள் கட்சி பிரதிநிதிகள், தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவர் ந.கருணாநிதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, வவுனியா வடக்கில் இன விகதாசாரத்தை மாற்றியமைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த தமிழ் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் இணைந்து செயல்பட தீர்மானிக்கப்பட்டதுடன்,


எதிர்வரும் 10ஆம் திகதி வவுனியா வடக்கு பிரதேச செயலகம் முன்பாக காலை 10 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த போராட்டத்திற்குத் தமிழ் மக்களின் இருப்பிலும், தமிழ் மக்களின் அடையாளத்தைப் பாதுகாப்பதிலும் அக்கறை கொண்ட அனைத்து தரப்புக்களையும் கலந்து கொண்டு ஜனநாயக ரீதியாகக் குரல் கொடுக்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.