பால் தொட்டியில் குளிக்கும் சீஸ் நிறுவன ஊழியர்களின் புகைப்படத்தால் பரபரப்பு!!

308

Milk Tank

சைபீரிய நகரமான ஓம்ஸ்க்கில் செயல்பட்டுவரும் ஒரு சீஸ் உற்பத்தித் தொழிற்சாலையின் ஊழியர்கள் இணையதளத்தில் வெளியிட்டிருந்த ஒரு புகைப்படம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில் எங்கள் வேலை மிகவும் போரடிக்கின்றது என்ற தலைப்புடன் ஆறு ஊழியர்கள் அரைக் காட்சட்டை மட்டும் அணிந்துகொண்டு பால்தொட்டியில் குளித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படமே இவ்வாறு வெளியானது.

வெற்றி அறிகுறியாக விரல்களை உயர்த்திக் காட்டிக்கொண்டிருக்கும் இந்தப் படம் யூடியூபில் 300,000ற்கும் மேற்பட்ட கருத்துகளைப் பெற்றுள்ளது.

சிரித்தபடி அந்த ஊழியர்கள் குளித்துக் கொண்டிருப்பது சீஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பச்சைப்பால் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

இதுமட்டுமின்றி திறந்த மார்புடன் சுகாதாரமற்ற பகுதியில் ஊழியர்கள் சீஸ் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களைத் திரட்டிக்கொண்டிருப்பதும் வீடியோக் காட்சிகளாக வெளியிடப்பட்டுள்ளது பொதுமக்களிடையே ஆத்திரத்தைத் தூண்டியது.

சிறப்புத் தயாரிப்பிற்குப் பெயர்போன இந்தத் தொழிற்சாலை இந்த ஆண்டு இதுவரை 14 நகரங்களில் 49 டொன்னுக்கும் மேலாக சீஸ் விற்பனை செய்துள்ளது.

இணையதளக் கருத்துகளைத் தொடர்ந்து ரஷ்யாவின் உணவுக் கண்காணிப்பு இந்தத் தொழிற்சாலை உற்பத்தியை கடந்த மாதம் தடை செய்துள்ளது. மேலும், கடந்த வியாழனன்று வெளியான நீதிமன்ற உத்தரவின் மூலம் 40 நாட்களுக்கு மூடப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலை மீதான விசாரணையை ரஷ்ய அரசு தொடங்கியுள்ளது.

பாதுகாப்பற்ற முறையில் மனித நுகர்வுக்கான தயாரிப்புகள் இங்கு நடைபெறுவது நிரூபிக்கப்பட்டால் இந்தத் தொழிற்சாலையின் மேலாளர்கள் இரண்டு மாத சிறைத் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.