வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனையில் குழப்பம் விளைவித்த ஆசிரியருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு!!

2426

வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்தில் குழப்பம் விளைவித்த ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (19.11) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் பாடசாலை நேரத்தில் பாடசாலைக்கு வந்த பெற்றோரான ஆசிரியர் ஒருவர் தனது மகனின் வகுப்பாசிரியர் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததுடன்,

புகைப்படம் எடுத்ததாக குறித்த பாடசாலை அதிபரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் குறித்த ஆசிரியர் வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்தில் விளக்கம் அளிப்பதற்காக சென்ற நிலையில் அங்கு இருந்த வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முரண்பட்டு வாய் தர்க்கம் புரிந்துள்ளதுடன், அதிகாரிகளுடன் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பில் 119 பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு பொலிசார் சென்றதும் குறித்த ஆசிரியர் அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளரால் குறித்த ஆசிரியருக்கு எதிராக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிசார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த ஆசிரியரே வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபருடன் முரண்பட்டு இடமாற்றம் பெற்று சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.