வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் அதி தீவிர சிகிச்சை பிரிவில்!!

4419

பாலசுப்பிரமணியம் டயாந்தன்..

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் அதிதீவிர சிகிச்சையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என அவரது உறவினர்கள் இன்று (04.12) குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா – மன்னார் வீதியில் குருமன்காடு சந்திக்கு அண்மையில் கடந்த வியாழக்கிழமை மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விபத்தில் சிக்கிய மூன்று மோட்டார் சைக்கிள்களும் வவுனியா பொலிசாரால் கொண்டு செல்லப்பட்டுள்ள போதும் இதுவரை எவரும் விபத்து தொடர்பில் கைது செய்யப்படவில்லை என விபத்தில் படுகாயமடைந்துள்ள இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் இருந்து மன்னார் வீதி வழியாக குருமன்காடு குருமன்காடு சந்தி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில்,

பெண்ணொருவர் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் வீதி ஒன்றில் திரும்ப முற்பட்ட போது இரு மோட்டர் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளானதுடன், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியதாக பாதிக்கப்பட்ட இளைஞர் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் சுயநினைவை இழந்த நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் கடந்த இரு நாட்களாக சிகிச்சை பெற்று வருகின்றார்.

வவுனியா கனேசபுரம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பாலசுப்பிரமணியம் டயாந்தன் என்பவரே சிகிச்சை பெற்று வருபவராவார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர் சார்பில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரிடம் இளைஞரின் உறவினர்கள் முறைப்பாடு செய்தும் எந்தவித நடவடிக்கையும் பொலிஸார் எடுக்கவில்லை என குடும்பத்தார் குற்றம் சாட்டிவருகின்றனர்.

குறித்த பெண் பயணித்த மோட்டார் சைக்கிளில் வைத்தியர் என அடையாள முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது எனவும், ஆனால் அதில் பயணித்தது வைத்தியரின் மனைவி என்றும் குறித்த வைத்தியர் தனக்கு இருக்கும் செல்வாக்கால் விசாரணையை தடுத்து வைத்துள்ளார் எனவும் பாதிக்கப்பட்ட இளைஞர் சார்பில் கருத்துக்களை தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞனின் உறவினர்களால் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைப் பொறுப்பதிகாரிக்கு குறித்த விடயம் தொடர்பில் இன்று (04.12) முறைப்பாடு செய்யப்பட்டதாகவும்,

இதையடுத்து சம்மத்தப்பட்ட போக்குவரத்து பொலிசாரை அழைத்து இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலிறுத்தியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில், விபத்துக்குள்ளான மூன்று மோட்டார் சைக்கிள்களையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும்,

பாதிக்கப்பட்ட இளைஞன் சுய நினைவு இல்லாமல் இருப்பதால் அவருடைய வாக்குமூலத்தை பெறமுடியவில்லை எனவும் இருந்தும் தாம் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.