வவுனியாவில் காணி தகராறு காரணமாக கைகலப்பு : 4 பெண்கள் உட்பட 8 பேர் கைது!!

1624

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் காணி தகராறு காரணமாக இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் இரு பகுதிகளையும் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 8 பேர் இன்று (04.12) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, கூமாங்குளம், முருகையா குளத்திற்கு செல்லும் வீதியில் உள்ள 2 ஏக்கர் அரச காணியாது உறவினர்கள் நான்கு பேருக்கு பகிரப்பட்டிருந்தது.

குறித்த காணிக்குரியவர்களில் ஒரு குடும்பத்தினர் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்று அங்குள்ள முகாமில் இருந்து கடந்த 5 வருடங்களுக்கு முன்னரே நாடு திரும்பியிருந்தனர்.

நாடு திரும்பிய நிலையில் அவர்களுக்கு உரித்தாக இருந்த காணியும் இங்கு வசித்து வந்த அவர்களது உறவினர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

அவர்கள் தமக்கான காணியை வழங்குமாறு கோரிய நிலையில் இரு பகுதியினருக்கும் இடையில் கடந்த பல மாதங்களாக வாய் தர்க்கம் இடம்பெற்று பிணக்கு ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்றிருந்ததுடன், இரு பகுதியினரையும் பிரச்சனைக்குரிய காணிக்குள் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது.

குறித்த காணியை கடந்த காலங்களில் பராமரித்து வந்தவர்கள் அக் காணிக்கான வேலிகளை அடைத்த நிலையில், இந்தியாவில் இருந்து நாடு திரும்பியர்கள் அது தமது காணி எனவும் அதற்குள் தாம் கொட்டகை அமைக்கப் போவதாகவும் தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொட்டகை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனால் இரு பகுதியினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டிருந்தது. அதில் இரு பகுதியிலும் இருந்து 8 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்றிருந்தனர். இது தொடர்பில் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில் மீண்டும் இரு பகுதியினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வவுனியா பொலிசில் மீண்டும் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து,

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் இரு தரப்பினையும் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் அக் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் குறித்த பிணக்கை பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் இரு மாதங்களுக்குள் தீர்வு வழங்குவதாக அவரால் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.