பரீட்சை முடிவை இணையத்தில் பார்க்கச் சென்ற மாணவி இரு நாட்களாக வீடு திரும்பவில்லை!!

577

Missingஇணையத்தளத்தில் பரீட்சை முடிவைப் பார்க்கச் சென்ற மாணவி இரு நாட்களாக வீடு திரும்பவில்லையென்று பெற்றோர் பதுளை பொலிஸ் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.

பதுளை சாரவியா தோட்டப் பிரிவொன்றைச் சேர்ந்த நடராஜா குகநந்தினி என்ற 18 வயது நிரம்பிய மாணவியே இரு தினங்களாக வீடு திரும்பாதவராவார்.

இம்மாணவி க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றி முடிவுகள் வரும் வரை வீட்டில் காத்திருந்துள்ளார். முடிவுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதை அறிந்த அம்மாணவி சார்வியா தோட்டத்திலிருந்து பதுளைக்கு வந்துள்ளார். பதுளை வந்த அவர் இரு தினங்களாக வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் பதுளை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். பதுளை பொலிஸார் இப் புகாரையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை இம்மாணவி குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லையென்று பொலிஸாரும் மாணவியின் பெற்றோரும் தெரிவித்தனர்.

பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் அம்மாணவி இருந்த போதிலும் அம்மாணவி மூன்று ‘எஸ்’ தர சித்திகளும் ஒரு ‘சீ’ தரச்சியுடன் நான்கு பாடங்களில் மட்டுமே சித்தியடைந்திருக்கின்றார்.

தமது பெரும் எதிர்பார்ப்பு பயனளிக்காமையினாலேயே அம்மாணவி வீடு திரும்பவில்லையென்றும் கூறப்படுகின்றது. காணாமல்போன மாணவியை தேடி அவரது பெற்றோரும் பதுளைப் பொலிஸாரும் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

தமது மகள் வேறு எங்கும் சென்றிருக்க முடியாது. அவரிடம் ஐந்நூறு ரூபா பணம் மட்டுமே இருந்ததென்றும் மாணவியின் பெற்றோர் கூறுகின்றனர்.