வவுனியாவில் சிறுமிகளை ஏமாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்!!

3284

நகரசபை மண்டபம்..

வவுனியாவில் வரவேற்பு நடனம் வழங்குவதற்காக அழைத்து வரப்பட்ட இரு சிறுமிகளின் நடனத்தை அரங்கேற்ற முன்னர் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுமக்கள் மண்டபத்தை விட்டு வெளியேறியமையால் சிறுமிகள் ஏமாற்றமடைந்த சம்பவம் ஒன்று இன்று (07.01) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிற்கு விஜயம் செய்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான குழுவினர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர். அதனடிப்படையில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் பொதுமக்களுக்கான கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த கூட்டத்திற்கு வரவேற்பு நடனம் வழங்குவதற்காக வவுனியா, சமயபுரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமிகள் இருவர் ஐக்கிய மக்கள் சக்தியினரால் அழைத்து வரப்பட்டிருந்தனர்.


இருப்பினும் சஜித் பிரேமதாச வேறு நிகழ்வுகளுக்கு செல்லவுள்ளதாக தெரிவித்து குறித்த சிறுமிகளின் நடனத்தை மேடையேற்றாது உரைகளுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

எதிர்கட்சி தலைவரின் உரை முடிந்ததும் மண்டபத்தில் இருந்து அவரும் அதிதிகளும் சிறுமிகளுக்கு எதுவும் கூறாது வெளியியேறியிருந்தனர். நிகழ்வு ஏற்பாட்டாளர்களும் சென்றுள்ளனர்.


அதனைத் தொடர்ந்தும் மண்டபம் நிறைந்திருந்த மக்களும் வெளியேறினர். சுமார் இரண்டு மணித்தியாலயமாக நடனமாடுவதற்கு தயார் நிலையில் இருந்த சிறுமிகள் ஏமாற்றமடைந்தனர்.

இறுதியில் அங்கு நின்ற சிறுமியின் ஊரவர்கள் சிலர் பாடலை ஒலிக்கச் செய்து இரு சிறுமிகளையும் வெற்றுக் கதிரைகளுடன் காட்சியளித்த மண்டபத்தில் நடனமாட வைத்தனர்.

ஊடகவியலாளரும், அங்கு நின்ற ஒரு சிலரும் குறித்த நடனத்தை பார்த்து மனம் உடைந்திருந்த சிறுமிகளை பாராட்டி விட்டு மண்டபத்தில் இருந்து வெளியேறியிருந்தனர்.