காது, மூக்கில் விஷம் செலுத்தி கொல்லப்பட்ட தம்பதி : மக்களை உலுக்கிய ஆணவக்கொலை வழக்கில் முக்கிய தீர்ப்பு!!

699

கண்ணகி – முருகேசன்..

தமிழகத்தை உலுக்கிய கண்ணகி – முருகேசன் ஆணவ கொலை வழக்கில், கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், அதே பகுதியில் வசித்த மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரும், ஊராட்சிமன்றத் தலைவருமான துரைசாமியின் மகள் கண்ணகிக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது காதல் மலர்ந்தது.

இதையடுத்து கடந்த 05.05.2003 அன்று இருவரும் கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு அவரவர் வீட்டில் தனித்தனியாக வசித்து வந்தனர்.

சிறிது நாள்கள் கழித்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள (தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம்) தனது உறவினர் வீட்டில் மனைவி கண்ணகியை தங்க வைத்த முருகேசன், ஸ்ரீமுஷ்னம் அடுத்திருக்கும் வண்ணாங்குடிகாட்டிலுள்ள மற்றோர் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

கண்ணகியைக் காணாமல் தேடிய அவரின் உறவினர்களுக்கு, இருவரது காதல் விவகாரம் தெரிய வந்தது. தொடர்ந்து முருகேசனின் சித்தப்பா அய்யாசாமியை அடித்து உதைத்து மூங்கில்துறைப்பட்டில் இருந்து கண்ணகியையும், ஸ்ரீமுஷ்னத்திலிருந்து முருகேசனையும் 2003-ம் ஆண்டு ஜூலை 8-ம் திகதி குப்பநத்தம் கிராமத்துக்கு அழைத்து வந்தனர் கண்ணகியின் உறவினர்கள்.

அன்றைய தினமே இருவரையும் மயானத்திற்கு அருகில் அழைத்துச் சென்று கை, கால்களை கட்டி ஊர்மக்கள் முன்னிலையில் காது மற்றும் மூக்கில் விஷத்தை செலுத்தினர்.

அன்றைய தினம் அரங்கேறிய அந்த ஆணவப் படுகொலையை அங்கிருந்த ஊர்மக்கள் யாரும் தட்டிக் கேட்கவோ, தடுக்கவோ முன்வரவில்லை.

சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்த இருவரது சடலத்தையும் தனித்தனியாக எரித்துவிட்டு வீடு திரும்பினார்கள். இந்த வழக்கின் விசாரணை ஆண்டுக்கணக்கில் நடந்த நிலையில் கடந்தாண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில் கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரின் அண்ணன், விருதாசலம் காவல் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வமுத்து, எஸ்.ஐ தமிழ்மாறன் உள்ளிட்ட 13 பேர் குற்றவாளிகள் என்று கூறிய நீதிமன்றம், அதில் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும், கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனையும் வழங்கியது.

இந்நிலையில் இன்று கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் தண்டனையை குறைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

அதன்படி கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. கண்ணகியின் தந்தை துரைசாமி, உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரங்கசாமி, சின்னதுரை ஆகிய இருவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.