இரணைமடு – யாழ். குடிநீர் திட்டத்தைக் கைவிடுமாறு மீண்டும் கோரிக்கை!!

285

Iranaimadu Kulam

இலங்கையின் வடக்கே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்வதற்கான திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் எனக் கோரி இரணைமடு குளத்தின் கீழ் விவசாயம் மேற்கொள்கின்ற விவசாயிகள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நேற்று நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பல்வேறு காரணங்களுக்காக நிலத்தடி நீர் மாசடைந்திருப்பதாகவும், அங்கு நிலத்தடியில் நன்னீர் வளம் குறைந்து செல்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இந்தத் திட்டத்துடன் சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இரணைமடு குளத்தைப் புனரமைத்தல், யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்குதல், குழாய் வழியாக கழிவகற்றும் கட்டமைப்பை உருவாக்குதல் என்ற மூன்று அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

எனினும், இந்தத் திட்டத்தை மேற்கொள்ளக் கூடாது என்று இரணைமடு குளத்தின் மூலம் விவசாயம் மேற்கொள்கின்ற விவசாய அமைப்புக்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள். இந்த நிலையிலேயே இந்த அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இரணைமடு குளத்து விவசாயிகளுக்குப் பல பிரச்சினைகள் இருக்கின்றன. நாங்களே தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கியிருக்கின்றோம். அவற்றில் கவனம் செலுத்தாமல், எமது வாழ்வாதாரத்தைப் பாதிக்கத்தக்க வகையில் இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு செல்லப்படுவதை நாங்கள் விரும்பவில்லை´ என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

விவசாயிகளின் மனங்களைப் புண்படுத்துகின்ற வகையில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினர் பிரசாரங்களை முன்னெடுத்திருப்பதை நிறுத்த வேண்டும் என்றும், இரணைமடு திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என கோரியே இந்த அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டதாக இரணைமடு விவசாயிகள் சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்தார்.

இந்த நிலையில் இரணைமடு திட்டத்தின் நிலைமை பற்றி வடமாகாண சபையின் விவசாய அமைச்சர் ஐங்கரநேசனை தொடர்புகொண்டு கேட்டபோது, இந்த விடயம் தொடர்பாக நிபுணர்குழு ஒன்றை நியமித்து அதன் முழுமையான விடயங்களைக் கண்டறிந்து நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகக் கூறினார்.

இதுபற்றி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகளின் கருத்தை உடனடியாகப் பெற முடியவில்லை.

-பிபிசி தமிழ்-