கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக மரணம் : கணவரின் உருக்கமான போஸ்ட்!!

1364

பென்னாகரத்தில்..

பென்னாகரம் அருகே ஏரியூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததற்கு, செவிலியர்கள் மற்றும் அரசு மருத்துவர்களின் கவனக்குறைவும், மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததும் காரணம் என உயிரிழந்த பெண்ணின் கணவர் உருக்கமாக போஸ்ட் போட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் பகுதியை சேர்ந்தவர் சத்யபிரகாஷ். இவர் பெங்களூருவில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (21). நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த மாதம் 19 ஆம் தேதி பிரசவத்திற்காக ஏரியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகப்படியான ரத்தப்போக்கு இருந்த நிலையில் ஏரியூர், பென்னாகரம், தருமபுரி என பல்வேறு மருத்துவமனைகளுக்கு அலைக்கழிக்கப்பட்டதன் விளைவாக பரமேஸ்வரி தருமபுரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவர்களில் அலட்சியத்தால் பெண் உயிரிழந்ததாக இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட கணவர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்ததோடு இன்று ஏரியூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டும் சாலையில் அமர்ந்து மறியலில் செய்தும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில், பரமேஸ்வரியின் கணவர் சத்யபிரகாஷ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ”ஏரியூர் அரசு மருத்துவமனையில் என் மனைவிக்கு பிரசவம் பார்த்த செவிலியர்கள் மற்றும் அரசு மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக என் மனைவி குழந்தை பிறந்த நிலையில் மேல் சிகிச்சைக்கு வசதியின்றி இறந்து விட்டார். ஏரியூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் எந்த தவறும் செய்யாததுபோல தங்களை (மருத்துவமனை நிர்வாகத்தை ) காத்து வருகின்றனர்.

”எனவே என் மனைவிக்கு நடந்த துயரமான சம்பவம் வேறு எந்த பெண்ணுக்கும் நிகழாதவாறு தடுக்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஒன்று பிரசவத்திற்கு அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய மருத்துவமனையாக ஏரியூர் மருத்துவமனையை மாற்ற வேண்டும் அல்லது அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய மருத்துவமனைக்கு பிரசவம் பார்க்க அனுப்ப வேண்டும்” என இவ்வாறு கோரிக்கையாக வைத்துள்ளார்.