கடற்கரையில் நடைப்பயிற்சி போனவர் பார்த்த பயங்கர காட்சி.. விசாரணையில் குழம்பிப்போன அதிகாரிகள்!!

1490


அமெரிக்காவில்..



அமெரிக்காவில் சூரிய உதயத்தை புகைப்படம் எடுக்க சென்ற நபர், துரதிருஷ்டவசமான முறையில் உயிரிழந்திருக்கிறார்கள். இது காவல்துறை அதிகாரிகளையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.



அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் போர்ட் செயின்ட் லூசிக்கு அருகில் அமைந்துள்ளது ஹட்சின்சன் தீவு. இங்குள்ள கடற்கரையில் பொதுமக்கள் வாக்கிங் செல்வது வழக்கம். அப்படி இந்த கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த ஒருவர் தூரத்தில் வித்தியாசமாக ஏதோ ஒன்று இருப்பதை கவனித்திருக்கிறார்.




உடனடியாக அதன் அருகே சென்ற அவர் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார். காரணம், மணலில் சிக்கியபடி இரண்டு கால்கள் மட்டும் வெளியே தெரிந்திருக்கின்றன. இதனால் திகைத்துப்போன அவர் உடனடியாக மணலை கைகளை கொண்டு அகற்றியுள்ளார்.


ஆனால், அவரால் உள்ளே சிக்கிய நபரை வெளியே எடுக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் கொடுத்திருக்கிறார் அவர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த மீட்புப்படை அதிகாரிகள் மணலை அகற்றி உள்ளே சிக்கியிருந்தவரை மீட்டுள்ளனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதன் பலனாக உயிரிழந்தவர் புளோரிடாவை சேர்ந்த 35 வயதான சீன் நாகல் என்பது தெரியவந்திருக்கிறது. இதனிடையே உயிரிழந்தவரின் உடல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.


இந்நிலையில், இதுகுறித்து பேசிய அந்த பகுதியின் ஷெரிப் வில்லியம் ஸ்னைடர்,” உயிரிழந்த நாகல் வழக்கமாக கடற்கரைக்கு சூரிய உதயத்தை படம் பிடிக்க செல்வது வழக்கம். ஆனால், துரதிஷ்டவசமாக மணல் குன்று சரிந்து அவர்மீது விழுந்திருக்கிறது. இதனால் அவர் உயிரிழந்திருக்கிறார்.

பிரேத பரிசோதனையில் அவருடைய நுரையீரலில் மணற்துகள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மரணத்திற்கான காரணம் சுவாசம் தடைப்பட்டது என பிரேத பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது” என்றார். மேலும் இதுபற்றி பேசும்போது அவர்,”இது வழக்கத்துக்கு மாறான விபத்து. இப்படியான ஒரு சம்பவத்தை நாங்கள் எதிர்கொண்டதில்லை.

உயிரிழந்தவர் அதிகாலை 5 அல்லது 6 மணியளவில் மணலில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அடுத்த 3 மணி நேரத்துக்கு அப்பகுதிக்கு யாருமே செல்லவில்லை. பின்னர் வாக்கிங் போனவர் அவரது கால்களை கண்டு எங்களுக்கு தகவல் கொடுத்தார்” என்றார்.

இந்நிலையில், நாகலின் மரணத்தில் குற்றவியல் சம்பவங்களுக்கான தடயம் ஏதுமில்லை எனவும் இது விபத்து தான் என்றும் சட்ட ஒழுங்கு துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.