37000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய விமானிகள்!!

608

தூங்கிய விமானிகள்..

சூடான் நாட்டின் கார்டோம் நகரில் இருந்து எத்தியோப்பியா தலைநகர் அட்டிஸ் அபாபாவுக்கு எதியோபியன் ஏர்லைன்ஸ்சின் போயிங் 737-800-ET343 பறந்து சென்றுள்ளது. இந்த விமானத்தை இரண்டு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானிகள் இயக்கியுள்ளனர்.

இந்த விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்த போதுதான் விமானிகள் இருவரும் 25 நிமிடங்கள் அலட்சியாக தூங்கிய அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமானம் தரையிறங்க வேண்டிய அடிஸ் அபாபா நகருக்கு அருகே வந்த போதும், நீண்ட நேரம் தரையிறங்காமல் வானில் பறந்துள்ளது. தொடர்ந்து, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தினருக்கு சந்தேகம் ஏற்படவே விமானிகளை அணுகி எச்சரித்துள்ளனர்.

ஆனால், விமானிகள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வராமல் தொடர்ந்து 37,000 அடி உயரத்திலேயே பறந்துள்ளது. இவர்கள் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், அதற்கான சிக்னல் கிடைக்கவில்லை.

இதனால், 25 நிமிடங்கள் குழப்பம் நிலவிய நிலையில், விமானம் அட்டிஸ் அபாபா விமான நிலையத்தின் ரன்வே பாதையை தாண்டி சென்றுள்ளது. அப்போது தான் ஆட்டோ பைலட் மோட் துண்டிக்கப்பட்டு, எச்சரிக்கை அலாரம் ஒலித்துள்ளது.

இந்த களேபரத்திற்கு பின்னர் தான் தங்களின் 25 நிமிட தூக்கத்தில் இருந்து விமானிகள் இருவரும் கண் விழித்துள்ளார்கள். நல்லவேளையாக இந்த சம்பவத்தின் காரணமாக விபத்து ஏதும் ஏற்படமால், விமான ஊழியர்கள், பயணிகள் உயிருக்கு ஆபத்து இல்லாமல் தப்பியுள்ளனர்.

விமானிகள் தூங்கியதை விமான கண்காணிப்பு அமைப்பான ADS-Bஇன் தரவுகளும் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விமானிகள் தூங்கியதை நாம் சாதாரணமாக கடந்துவிடக் கூடாது, இது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என விமான ஆய்வாளர் அலெக்ஸ் மச்செரஸ் வலியுறுத்தியுள்ளார்.