எகிப்தில் 683 பேருக்கு மரண தண்டனை : சர்வதேச நாடுகள் கடும் கண்டனம்!!

308

DEATH PENALTY AGAINST ANTI-COUP EGYPTIANS

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த ஜனாதிபதி முஹம்மது மோர்சி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியிறக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவரது ஆதரவாளர்களும், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

அவர்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலர் மீது தேசத் துரோக குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எகிப்து நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்று வருகிறது. இவற்றில் ஒரு வழக்கில் தொடர்புடைய மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு கடந்த மார்ச் மாதம் மரண தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில், மின்யா காவல்நிலையம் மீது நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் மூத்த தலைவர் முகமது பேடி உள்ளிட்ட 683 பேருக்கு இப்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பைக் கேட்டதும், நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த அவர்களின் உறவினர்கள் பலர் மயங்கி விழுந்தனர். இந்த வெகுஜன விசாரணை மற்றும் தீர்ப்பினை மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.

அவசர கதியில் நடத்தப்பட்ட இந்த விசாரணையானது நடைமுறை முறைகேடுகள் நிறைந்தவை என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.