பிரபாகரனோடு மன்னார் ஆயரை ஒப்பிட்டமைக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்..!

472

புலிகளின் அரசியல் பிரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவராகவும், புதிய பிரபாகரனாகவும் கத்தோழிக்க திருச்சபையின் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை செயற்பட்டு வருகின்றார் என பொதுபல சேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தினை தொடர்ந்து தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உரிமை தொடர்பாகவும், தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாகவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் குரல் கொடுத்து வந்தார்.

தற்போது பொதுபல சேன என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வந்தனர். தற்போது தமிழ் மக்கள் மீது அவர்களின் செயற்பாடு ஆரம்பித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அன்று முதல் இன்றுவரை தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றது. தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனும் நோக்குடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் செயற்பட்டு வருகின்றார்.

தமிழ் மக்களுக்கு ஒரு பக்க பலமாக மன்னார் மறைமாவட்ட ஆயர் செயற்பட்டு வருகின்றமையினை பொது பல சேன அமைப்பினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதன் எதிரொலியாக அரச தரப்பில இருந்து தொடர்ச்சியாக மன்னார் ஆயருக்கு எதிரான விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இதன் ஒரு அங்கமாக பொதுபல சேன என்ற பேரினவாத அமைப்பு கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.

மன்னார் ஆயர் தமிழர் என்பதினால் இலங்கைக்கு எதிராக பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார். மன்னார் ஆயருக்கு எதிராக குரல் கொடுக்க சிங்கள ஆயர்கள் முன்வர வேண்டும் என குறித்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் மக்களின் எகோபித்த பிரதி நிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்ற நிலையில் மன்னார் ஆயர் தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றார். ஆன்மீக பணி செய்கின்றவர்கள் தன் மக்கள் சார்பாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் குரல் கொடுக்க கூடாது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

எனவே தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் மன்னார் அயருக்கு எதிராக பொது பல சேன அமைப்பு முன் வைத்துள்ள கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.