வெள்ளத்தில் பலியானோரின் சடலங்கள் நூற்றுக்கணக்கில் எரிப்பு..!

433

வட இந்தியாவில் வெள்ளத்தில் பலியானவர்களை ஒட்டு மொத்தமாக எரிக்கும் பணிகள் நடக்கின்றன. வெள்ளத்தினாலும், நிலச்சரிவினாலும் 800க்கும் அதிகமானோர் அங்கு இறந்துள்ளனர்.

மோசமான காலநிலையால் ஏற்பட்ட தாமதத்தை அடுத்து கோயில் நகரான கேதாரநாத்தில் குறைந்தபட்சம் 200 சடலங்களாவது ஒன்றாக எரிக்கப்பட்டன.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியிருக்கும் நிவாரண முகாம்களில் தொற்று நோய்கள் ஏற்படும் ஆபத்துக் குறித்து தொண்டர் அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.

வெள்ளம் ஆரம்பித்து 11 நாட்கள் ஆன பின்னரும், இமாலய மலையின் பல பாகங்களில் அகப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை மீட்கும் பணிகளில் மீட்புப் பணியாளர்கள் இன்னமும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு லட்சம் பேர் வரையிலானோர் இதுவரை தமது இடங்களில் இருந்து வெளியெற்றப்பட்டிருக்கிறார்கள். மலைகளில் அகப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்களையும், சுற்றுலாப்பயணிகளையும் மீட்பதற்காக இராணுவம் ஹெலிக்கொப்டரைப் பயன்படுத்துகிறது.

செவ்வாயன்று நடந்த மீட்புப் பணியில் ஈடுபட்ட ஹெலிக்கொப்டரின் விபத்தில் 20 பேர் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தராகாண்டில் இந்த வருடத்தில் மழைக் காலத்துக்கு முன்பாகவே ஆரம்பித்துவிட்ட கடுமையான மழை, கடந்த 80 வருடங்களில் பெய்த மிகவும் பெரிய மழையாகும்.

பெருக்கெடுத்த ஆறுகள், அந்த மாநிலத்தின் அனைத்துக் கிராமங்களையும் அடித்துச் சென்றுவிட்டன.

இலகுவில் சென்றடைய முடியாத பகுதிகளில் இருந்து பலியானவர்களின் எண்ணிக்கை கிடைக்கும் போது இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.