விபரீதத்தில் முடிந்த கண்ணாமூச்சி விளையாட்டு : சிறுமியின் உயிரைப் பறித்த சோகம்!!

330

மும்பையில்..

மும்பையின் மன்குர்த் என்ற பகுதியில் லிப்டில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை ரேஷ்மா கரவி என்ற அந்த சிறுமி தனது பாட்டியின் வீட்டிற்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விளையாட்டின் ஒரு பகுதியாக அருகில் மறைந்திருந்த தனது தோழிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்,

லிப்டில் இருந்த ஜன்னல் போன்ற திறப்புக்குள் தலையை விட்டு பார்த்தபோது லிப்ட் கீழே இறங்க, மாணவியின் தலையில் மோதி உயிரிழந்துள்ளார்.

ஹவுசிங் சொசைட்டியை அதிகாரிகள் அலட்சியமாக நடத்துவதாக இறந்த சிறுமியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். உயிரிழந்த சிறுமியின் தந்தை கூறுகையில், இது மாதிரியான அவலங்களைத் தவிர்க்க வீட்டுவசதி சங்கம் இதுபோன்ற திறப்பை அலட்சியப்படுத்தாமல் கண்ணாடியால் மூடியிருக்க வேண்டும் என்றார்.

ரேஷ்மாவின் குடும்பத்தினர் காவல்துறையை அணுகி புகார் கொடுத்ததில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக மன்குர்த் காவல் நிலைய மூத்த காவல் ஆய்வாளர் மகாதேவ் காம்ப்ளே கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக வீட்டு வசதி சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளரை கைது செய்துள்ளோம் என்றார்.

ரேஷ்மாவின் குடும்பம் அப்பகுதியின் அருகிலுள்ள சாத்தே நகரில் வசித்து வருகிறது. அவரது பாட்டி மன்குர்டில் உள்ள ஹவுசிங் சொசைட்டியின் ஐந்தாவது தளத்தில் வசித்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக தனது பாட்டியை பார்க்கச் சென்றபோது இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.