மீண்டும் ஆரம்பமாகின்றது மலேசிய விமானத்தின் தேடுதல் வேட்டை!!

319

Flight

மாயமான மலேசிய விமானத்தினை தேடுவதற்கு புதிய மற்றும் அதிநவீன உபகரணங்களை பயன்படுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் கடந்த மார்ச் 8ம் திகதி புறப்பட்டுச் சென்ற போயிங் விமானம் மர்மமான முறையில் மாயமானது.

சுமார் 2 மாதகாலமாக தேடியும், விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து அடுத்தகட்ட தேடுதல் பணி குறித்து அவுஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தின.

அவுஸ்திரேலிய துணை பிரதமர் வாரன் ட்ரஸ், தேடுதல் குழுவின் தலைவர் ஆக்னஸ் ஹூஸ்டன் ஆகியோர் மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ஹிஷாமுதின் உசைன் மற்றும் சீன போக்குவரத்து துறை மந்திரி யாங் சுவான்டாங் ஆகியோரை கான்பெராவில் சந்தித்தனர்.

அப்போது, இந்திய பெருங்கடலுக்கு அடியில் 60 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தேடும் பணியை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

கடலுக்கடியில் தேடும் பணியில் ஈடுபடுவதற்கு புதிய மற்றும் அதிநவீன உபகரணங்களைப் பெறுவதற்கான டெண்டர் நடவடிக்கை தொடங்கியிருப்பதாக ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று உயர் தலைவர்களும் நாளை மறுநாள் மீண்டும் சந்தித்து, இதுவரை பெறப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகளை ஆய்வு செய்கின்றனர்.