கிளிண்டனுடனான உறவு பற்றி மனம் திறந்த மோனிகா!!

297

Monika

அமெரிக்க வெள்ளை மாளிகையில் 1990களில் பில் கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்தபோது, சக்தி வாய்ந்தவராக வளையவந்த அவரின் உதவியாளர் மோனிகா லெவின்ஸ்கி, தற்போது தனது மௌனத்தை உடைத்து சில ரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை அவர் அப்போதைய நிகழ்வுகளுக்காக வருத்தம் தெரிவித்ததுடன், இது குறித்து வெளிப்படையான கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

தற்போது 40 வயதாகும் மோனிகா லெவின்ஸ்கி, வானிட்டி ஃபேர் மெகஸினுக்கு எழுதிய கடிதக் கட்டுரையில், என் கடந்த கால காதல் வாழ்க்கை மற்றும் மற்றவர்களின் எதிர்காலம் ஆகியவற்றை நினைத்துப் பார்க்கிறேன். என்னுடைய கதையின் முடிவினை வித்தியாசமாக முடித்து வைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன் என்று கூறியுள்ளார்.

கிளிண்டனுடன் அவருக்கு ஏற்பட்ட காதல் உறவு, மூத்தவர்களின் ஒப்புதல், பொது வாழ்க்கையின் அவமானம் ஆகியவற்றில் சிக்கிக் கொண்டு, அதனால் வாழ்வில் போக்கு திசை மாறி பலவித இன்னல்களை அளித்தது.

பில் கிளிண்டனின் அதிகாரம் மிகுந்த வாழ்க்கையினை பாதுகாப்பதற்காக நான் ஒரு பலியாடு ஆக்கப்பட்டேன். இதன் பின்விளைவாக ஏதோ துஷ்பிரயோகம் தொடர்ந்தது என்று அந்த மேகஸினின் இணைய தளப் பதிப்பில் வெளியான கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் லெவின்ஸ்கி மேலும் குறிப்பிட்டுள்ளது… “எனக்கு நானே ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறேன்… எனக்கும் ஜனாதிபதி கிளிண்டனுக்கும் இடையில் நடந்தவற்றுக்காக மீண்டும் நான் சொல்கிறேன்.. நான், எனக்கு நானே… மன்னிப்பு. எது நடந்ததோ அதற்காக” என்று கூறியுள்ளார்.

மோனிகா லெவின்ஸ்கி, கிளிண்டன் குறித்த இந்தப் பாலியல் விவகாரம் வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வெள்ளை மாளிகையின் கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக எழுந்த புகாரால், பல்வேறு கட்ட விசாரணைகள், அறிக்கைகள் என ஊடகங்களில் வெளிச்சம் பரவியது. அதைத் தொடர்ந்து, 99ல் செனட் அவையினால் கிளிண்டன் மீது சபை அவமதிப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது.

பாலியல் முறைகேடு என்ற பெரும் அலை அடித்து ஓய்ந்த போது, மோனிகா முற்றிலும் ஓரங்கட்டப்பட்டிருந்தார். இவற்றில் இருந்து முற்றிலும் ஒதுங்க தனக்கு 10 மில்லியன் டாலர் தொகை வழங்கவும் ஒரு தரப்பு முயன்றதாக அவர் கூறியிருந்தார்.

ஆனால் பின்னர் அடிக்கடி நடந்த விசாரணைகளால் பெரிதும் மன உளைச்சல் அடைந்த மோனிகா லெவின்ஸ்கி, தான் சில முறை தற்கொலைக்கு முயன்றதாகக் கூறியுள்ளார்.

கடந்த 2010ல் ரட்கெர்ஸ் பல்கலை மாணவி ஒருவர், ஒரு ஆடவனை முத்தம் கொடுத்தது வீடியோ பதிவாக இணையத்தில் வந்தது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரின் இந்தச் செயல் என்னை இத்தகைய அவமானத்துக்கு எதிரான நடவடிக்கையில் இறங்க தூண்டுகோலாக அமைந்தது… என்று கூறியுள்ள மோனிகா, இணையதளத்தில் உலக அளவில் பெருத்த அவமானத்தை ஏற்படுத்திப் பரப்பும் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் முதல் நபராக நான் இருந்தேன் என்றும் கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில், இணைய வெளியில் இது போன்ற அவமானச் செய்திகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக, பொது வெளியில் பேசுவதற்கான மேடைகளில் தான் பங்கேற்று வருவதாக அவர் அந்தக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்டுரை தொடர்பாக, கிளிண்டனின் செய்தித் தொடர்பாளரோ, நியூயோர்க்கில் உள்ள கிளிண்டன் பவுண்டேஷனோ உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.