ஒபாமாவின் மகள்களை கடத்த முயற்சியா?

292

Obama

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா-மிச்செல்லி தம்பதியருக்கு மாலியா (16), சஷா (13) என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்கள் நேற்று முன்தினம் காரில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களது காரைத்தொடர்ந்து பாதுகாப்பு வாகனங்கள் அணி வகுத்து வந்தன. அவற்றுடன் ஒபாமா மகள்களின் காருக்குப் பின்னால் மற்றொரு காரும் பின்தொடர்ந்து வந்தது.

அந்தக்கார் வெள்ளை மாளிகைக்கு அருகே அமைந்துள்ள, பிற வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள, உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களைக்கொண்ட பென்சில்வேனியா அவென்யூவில் 17வது சோதனைச்சாவடியையும் கடந்து வந்து விட்டது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், ஒபாமாவின் மகள்களை பின்தொடர்ந்து வந்ததால், அவர்களை கடத்திச்செல்வதற்காக அந்தக்கார் வந்திருக்கலாம் என கருதினர். உடனே சந்தேகத்துக்கு இடமான அந்தக்காரை தடுத்து நிறுத்தினர்.

காருக்குள் வெடிகுண்டு அல்லது வெடிபொருட்கள் அல்லது ஆயுதங்கள் இருக்கின்றனவா என சோதனை போடப்பட்டது. இந்த சம்பவத்தின்போது, வெள்ளை மாளிகை மூடப்பட்டது. ஒருமணி நேர சோதனை நடவடிக்கைக்கு பின்னர் காரை ஓட்டி வந்த மேத்யூ ஈவன் கோல்டுஸ்டெயின் (55) என்ற அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது சட்டவிரோதமாக பென்சில்வேனியா அவென்யூவில் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் விசாரணைக்காக நகர பொலிஸ் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

ஏற்கனவே நைஜீரியாவில் 200க்கும் மேற்பட்ட பள்ளிக்கூட மாணவிகளை அங்கு தனிநாடு கேட்டு போராடி வருகிற போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்திச்சென்று ஒருமாதம் ஆகியும் அவர்கள் கதி என்ன என தெரியவில்லை.

அவர்களை மீட்பதற்கு மீட்புக்குழுவை அனுப்பி வைப்பதாக ஒபாமா அறிவித்துள்ள நிலையில், அவருக்கு மிரட்டல் விடுக்கிற விதத்தில் அவரது மகள்களையே கடத்த முயற்சி நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்தச்சம்பவத்தால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.