வவுனியா பொலிசாரால் முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் கைது : நகைகளும் மீட்பு!!

771

நகைகள் மீட்பு..

முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று (09.01) தெரிவித்தனர்.

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் கடந்த 3 ஆம் திகதி வீடு புகுந்து சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரால் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பூ.கஜேந்திரன் தலைமையில்,

பொலிஸ் சார்ஜன்களான திசநாயக்க (37348), திலீப் (61461), பொலிஸ் கொன்டபிள்களான உபாலி (60945), தயாளன் (91792), தர்மகீர்த்தி (91983) உள்ளிட்ட பொலிஸ குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த விசாரணைகளின் அடிப்படையில் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து திருடப்பட்டதாக கருத்தப்படும்,

காப்பு, சங்கிலி உள்ளிட்ட நகைகளும் மீட்கப்பட்டன. இதனையடுத்து மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்தனர்.