வவுனியாவில் பொலிசாரின் ஒத்துழைப்புடன் போதை மாத்திரைகள் மீட்பு!!

830

வவுனியாவில் பொலிசாரின் ஒத்துழைப்புடன் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி அரங்கன் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் பாவனை தொடர்பில் இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்திலும் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. மதுபான பாவனையை விட இன்று மிகவும் மோசமாக வேறு விதமான போதைப் பொருள் பாவனை சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களிடத்தில் அதிகரித்துச் செல்கின்றது.

வலி நிவாரணி மாத்திரைகள் கூட அதிக விலைக்கு பெற்று போதைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வவுனியா நகரப் பகுதியில் கடந்த காலங்களில் அவ்வாறான மாத்திரைகள் மீட்கப்பட்டன.

வவுனியாவின் நெளுக்குளம், கூமாங்குளம், செக்கட்டிப்புலவு உள்ளிட்ட பல கிராமப் பகுதிகளிலும் போதை மாத்திரைகளுடன் சில இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். பாடசாலைகளின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளது.

ஆனால் பெற்றோர் தமது பிள்ளைகளின் நடத்தைகள், அவர்களின் நண்பர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், அளவுக்கு அதிகமாக பிள்ளைகளிடம் பணம் வழங்குவதையும் நிறுத்த வேண்டும்.

வீட்டில் சமைத்த உணவுகளை பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு கொடுத்து விடுங்கள். போதைப் பொருள் பாவனையை சுகாதாரத் துறையினரும், பொலிசாரும் இணைந்து மட்டும் கட்டுப்படுத்த முடியாது.

பெற்றோருடைய ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். எனவே பெற்றோர் மட்டுமன்றி சமூகமட்ட அமைப்புக்கள், பாடசாலைகள் என அனைவரும் போதைப் பொருள் பாவனை தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.