நடுவானில் 33,000 அடி உயரத்தில் விமானத்தில் இருந்து விழுந்த பணிப்பெண் உயிர் பிழைத்த அதிசயம்!!

411

ஜேர்மனியில்..

கடந்த 1972ம் ஆண்டு கிழக்கு ஜேர்மனியில் ஹெர்ம்ஸ்டோர்ஃப் மீது பறந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு விபத்து அரங்கேறியது, அப்போது பாராசூட் இல்லாமல் 33,000 அடியில் இருந்து விழுந்த விமானப் பணிப்பெண் வெஸ்னா வுலோவிக் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பி கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார்.

கடந்த 1972ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி JAT யுகோஸ்லாவ் ஏர்லைன்ஸ் விமானம் 357 கிழக்கு ஜேர்மனியில் ஹெர்ம்ஸ்டோர்ஃப் மீது பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ராடர் திரையில் இருந்து காணாமல் போனது மற்றும் விமானத்தின் அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து விமானம் முன்னாள் செக்கோஸ்லோவாக்கியாவிற்கு மேலே நடுவானில் வெடித்தது, பிறகு அங்குள்ள மலைப்பகுதியில் மோதியது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரோஷியாவில் உள்ள தீவிர வலதுசாரி நாஜி/பாசிசக் குழுவான உஸ்தாஷே என்ற பயங்கரவாதக் குழுவால் விமானத்தில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக நம்பப்படுகிறது.

ஆனால் 2009 ஆம் ஆண்டில், ஜெர்மன் மற்றும் செக் பத்திரிகையாளர்கள் குழு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், விமானம் எதிரி விமானம் என்று தவறாக கருதப்பட்டு செக்கோஸ்லோவாக்கிய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் இது மிகவும் சாத்தியமானது என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கு செக் இராணுவ வல்லுனர்கள் இந்த அறிக்கையை சதி கோட்பாடு என்று நிராகரித்துள்ளனர். விமானம் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளான போது அதில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த செர்பிய பெண் வெஸ்னா வுலோவிக், பாராசூட் இல்லாமல் பயங்கரமான 33,333 அடி உயரத்தில் இருந்து விழுந்தும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேலும் இதற்காக வெஸ்னா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். விமானம் 33,000 அடியில் இருந்து கீழே விழுவதற்கு 3 நிமிடங்கள் வரை எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வெஸ்னா வுலோவிக் குண்டு வெடிப்பின் போது விமானத்தின் உணவு தொகுப்பு பகுதியில் சிக்கிக் கொண்டதால் உயிர் பிழைத்துள்ளார். விமானத்தில் பயணித்தவர்களில் வெஸ்னா வுலோவிக் மட்டுமே உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இடுப்பிலிருந்து கீழே செயலிழந்த வெஸ்னா இறுதியில் முழுமையாக குணமடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.