சிறுமியை காதலித்த இளைஞன் திடீரென எடுத்த விபரீத முடிவு!!

400

ராசிபுரத்தில்..

ராசிபுரம் அருகே சிறுமியை காதலித்த இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அதற்கு முன்பு அவர் கத்தியை வைத்து தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கே. கே. வலசு ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி (26). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் வீரமணி அவரது வீட்டின் அருகே வசித்து வந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த காதல் விவகாரம் குறித்து சிறுமியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் இளைஞர் வீரமணியை அழைத்து கண்டித்துள்ளனர். அதனால் விரக்தியில் இருந்த வீரமணி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள மணியனூர் என்ற பகுதிக்கு பேருந்தில் நேற்று இரவு சென்றுள்ளார்.

அந்தப் பகுதியில் அங்காளம்மன் கோயில் உள்ளது. அந்தக் கோயிலுக்குள் நுழைந்த வீரமணி அங்கிருந்த கத்தியால் தன்னைத்தானே கழுத்து மற்றும் கைகளில் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதனை அந்த கிராம மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து நல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர்.

பின்னர் கிராம மக்கள் மற்றும் நல்லூர் காவல் துறையினர் கோவிலுக்குள் படுகாயங்களுடன் இருந்த வீரமணியை சாதுரியமாக பேசி வெளியே வரவழைத்தனர். தொடர்ந்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் ஆம்புலன்சில் சென்று கொண்டிருந்த இளைஞர் வீரமணி திடீரென ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்துள்ளார். அந்த சத்தத்தை கேட்டதும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டார்.

வாகனம் நின்ற மறுகணமே வீரமணி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். தப்பி ஓடிய வீரமணியை காவல் துறையினர் சுற்றுவட்டார பகுதிகளில் தேடி திரிந்தனர். அப்போது அவர் மணியனூரில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார்.

அவரது உடலை காவல் துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவமனையில் உயிரிழந்த வீரமணியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குவிந்தனர்.

அவர்கள் சிறுமியின் உறவினர்கள் தாக்கியதால் தான் இளைஞர் வீரமணி கோயிலுக்குள் புகுந்து கத்தியால் தற்கொலைக்கு முயன்றதாகவும் வீரமணி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் வீரமணியை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறி நாமக்கல் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வீரமணியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

அதனை அடுத்து மருத்துவமனையில் போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து வீரமணி உயிரிழந்த சம்பவம் குறித்து நல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.