மகள் கொலை.. தந்தை தற்கொலை.. தாய் புற்றுநோயால் இறப்பு : 5 மாதத்தில் சிதைந்த குடும்பம்!

469


சென்னையில்..



சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சத்யாவின் தாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் மாணிக்கம் – ராமலட்சுமி தம்பதியினர்.



ஆதம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்த மாணிக்கத்திற்கு சத்தியப்பிரியா (20) என்ற மகள் இருந்தார். இவர் தி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3ம் ஆண்டு படித்து வந்தார்.




சத்தியப்பிரியாவை அதே பகுதியைச் சேர்ந்த ஒய்வு பெற்ற போலிஸ் அதிகாரியின் மகனான சதீஷ் காதலித்து வந்ததாகவும், அவரிடம் தனது காதலை சொல்லியும், சத்தியா புறக்கணித்து வந்ததாகவும் கூறப்பட்டது.


இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த அக்டோபர் 13-ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் தனது தோழிகளுடன் வந்த சத்தியாவை பின்தொடர்ந்துள்ளார். அப்போது அவரை தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில் வரும்போது தள்ளி விட்டுள்ளார்.

இதில் ரயிலில் சிக்கிய சத்தியா தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். பின்னர் குற்றவாளி சதீஷயும் காவல்துறையினர் கைது செய்தனர்.


இதனிடையே தனது மகளின் இறப்பு தாங்கமுடியாத சத்தியாவின் தந்தையும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது மேலும் சத்தியாவின் குடும்பத்தை கடுமையாக பாதித்தது.

இதையடுத்து சத்தியாவின் தாய் ராமலட்சுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஐந்தே மாதத்தில் மகள், தந்தை, தாய் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.