கொரோனாவால் முடங்கிய தொழில்.. ஏமாற்றிய ஊழியர்கள்.. மனைவி, மகன்களை கொலை செய்த நபர் எடுத்த விபரீத முடிவு!!

292

டெல்லியில்..

டெல்லியின் மோகன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (38). இவருக்கு சுனிதா என்ற மனைவியும் 5 வயது, 4 மாத குழந்தை என இரு மகன்கள் இருந்தனர். ராஜேஷ் ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கு நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளார்.

இந்த நிறுவனம் கொரோனா ஊரடங்கு காலத்தில் நெருக்கடியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. தொழில் மோசமடையவே கடன் நெருக்கடிக்கு ஆளான ராஜேஷ், தொழிலை நிறுத்திவிட்டு கடை தொடங்கி நடத்திவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நேரத்தில் தனது மனைவி சுனிதா, 5 வயது மகன், 4 மாத குழந்தை ஆகிய மூவரையும் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தனது கை மணிக்கட்டையும் அறுத்துக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் நடைபெறும் முன்பாக நீண்ட பதிவு ஒன்றை தனது வாட்ஸ் ஆப் நண்பர்கள் குழுவில் போஸ்ட் செய்துள்ளார். அதில், “நான் கடும் கடன் சுமையில் இருக்கிறேன். கோவிட் லாக்டவுன் காலத்தில் எனது தொழில் பெரும் பாதிப்பு கண்டது.

எனது ஊழியர்கள் என்னை ஏமாற்றி வாடிக்கையாளர்களை போட்டி நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தனர். பல பேரின் மோசடியால் கடும் பண நெருக்கடிக்கு ஆளாகியுள்ளேன்” என நீண்ட பதிவை எழுதியுள்ளார்.

இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ராஜேஷின் நண்பர்கள், அவரது சகோதரருக்கு தகவல் தரவே அவர் உடனடியாக ராஜேஷின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ராஜேஷ், மனைவி, இரு குழந்தைகள் நால்வரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

மனைவி, மகன்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ராஜேஷ் மட்டும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.