வவுனியாவில் சீனிப்பாணியை காய்ச்சி தேன் என விற்பனை செய்தவர் கைது : 41 லீற்றர் சீனிப் பாணி கைப்பற்றல்!!

1424


சீனிப்பாணி..



வவுனியாவில் சீனிப்பாணியினை காய்ச்சி தேன் என விற்பனை செய்த நபரை சுகாதார பிரிவினர் சுற்றிவளைத்துடன் அவரிடமிருந்து 41லீற்றர் சீனிப்பாணியினையும் கைப்பற்றியுள்ளனர்.



தேன் என சீனிப்பாணியினை விற்பனை செய்கின்றமை தொடர்பில் வவுனியா சுகாதார பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொது சுகாதார பரிசோதகர்களான வாகீசன், சிவரஞ்சன், ஞானப்பிரகாசம், ஜொய்போஸ்டர் ஆகியோர் காத்தார் கோட்டம் பகுதியிலுள்ள குறித்த வீட்டினை சுற்றிவளைத்தனர்.




இதன் போது குறித்த வீட்டில் விற்பனைக்கு தயாரான முறையில் காணப்பட்ட 55 போத்தல்களில் அடைக்கப்பட்ட சீனிப்பாணியினை சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றியதுடன் சீனிப்பாணி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் கைப்பற்றினர்.


சந்தேகநபர் நெளுக்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன் சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட 55 போத்தல்களில் அடைக்கப்பட்ட 41லீற்றர் சீனிப்பாணி பொருட்கள் என்பன வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தபடுத்தப்பட்ட சமயத்தில் எதிர்வரும் 10ம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சீனிப்பாணியினை தேன் என ஏ9 வீதிகளில் தினசரி வியாபாரம் மேற்கொள்ளுவதுடன் யோகட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் வழங்குவது சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.