கணவன், மாமியாரைக் கொலை செய்த இளம் பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

397

மும்பையில்..

மும்பை சாந்தாகுரூஸ் பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண் வேறொரு நபருடன் திருமணம் மீறிய உறவில் இருந்துவந்திருக்கிறார். இந்த நிலையில், அந்த நபருடன் சேர்ந்து தன்னுடைய கணவர், மாமியாருக்கு சாப்பாடு, ஜூஸில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கலந்து கொடுத்துவந்திருக்கிறார்.

இதில் கவிதாவின் மாமியார் சரளா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கவிதாவின் கணவருக்கும் அதே போன்று வயிற்று வலி ஏற்பட்டு, செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார்.

இந்த இரட்டைப் படுகொலை தொடர்பாக கவிதா, அவருடன் நெருங்கிப் பழகி வந்த ஹிதேஷ் ஜெயின் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இதில் கணவர் கமல்காந்த் கொலையை ஆதாரத்துடன் நிரூபித்துவிட முடியும். அவரின் பிரேத பரிசோதனை அறிக்கையும் இருக்கிறது.

ஆனால் சரளாவுக்குப் பிரேத பரிசோதனை அறிக்கை கிடையாது. எனவே சரளாவை கவிதாவும், அவருடன் பழகிவந்த இளைஞரும் சேர்ந்துதான் கொலைசெய்தனர் என்பதை நிரூபிக்க போலீஸாரிடம் திடமான ஆதாரம் இல்லை.

இது குறித்து குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் பேசுகையில், “கைதுசெய்யப்பட்டிருக்கும் ஹிதேஷ் இன்டர்நெட்டில் 109 முறை விஷத்தையும், 156 முறை தெல்லியத்தையும் தேடியிருக்கிறார். விஷத்தை வாங்க வியாபாரியுடன் வாட்ஸ்அப்பில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20-ம் தேதி அவசரமாக விஷம் தேவை என்று சொல்லி வாங்கியிருப்பது தெரியவந்திருக்கிறது. எனவே, அதன் மூலம்தான் சரளாவைக் கொலைசெய்திருப்பது தெரிகிறது. இந்த வழக்கில் கமல்காந்தின் சமையல்காரரின் வாக்குமூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.

அந்த சமையல்காரர் தனது வாக்குமூலத்தில், `பொதுவாக கவிதா தனக்கும், தன்னுடைய மகளுக்கும் மட்டும்தான் சமைப்பது வழக்கம். மற்றவர்களுக்கு சரளாதான் சமைப்பார். ஆனால், படிப்படியாக கவிதா சமையல் அறையைத் தனது கட்டுக்குள் கொண்டுவந்தார்.

ஒரு கட்டத்தில் கவிதா சமையல் செய்யும்போது சமையல் அறைக்குள் யாரையும் அனுமதிப்பது கிடையாது. நான் சரளாவுக்கு குளிக்க மண்பானையில் தண்ணீர் சுடவைப்பது வழக்கம்.

அதில் தண்ணீர் நிரப்பும் வேலையைக்கூட கவிதா எடுத்துக்கொண்டார். அதோடு சரளாவுக்கு சாப்பாடு கொடுக்கும் வேலையையும் கவிதா எடுத்துக்கொண்டார். இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சரளா இறந்தவுடன் நன்றாக இருந்த மண்பானையை வெளியில் எடுத்துச் சென்று போட்டுவிடும்படி கேட்டுக்கொண்டார். சரளா இறந்தபிறகு கவிதா தன்னுடைய கணவருக்கு பாலில் தயாரிக்கப்படும் உகாலா எனப்படும் ஒருவித பானத்தை தானே தயாரித்துக் கொடுக்க ஆரம்பித்தார்.

எப்போது அவர் உகாலா தயாரித்தாலும், அப்போது என்னை சமையல் அறையில் இருக்கவிடமாட்டார்’ என்று தெரிவித்திருக்கிறார். இந்த வாக்குமூலம் வழக்கில் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இரட்டைக் கொலையை நிரூபிக்க எங்களுக்கு போதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

ஹிதேஷ் ஜெயின் விஷம், தெல்லியத்தை இந்தியாமார்ட்டில் இடம் பெற்றிருக்கும் வியாபாரிகளைத் தொடர்புகொண்டு வாங்கியிருக்கிறார். இரண்டையும் தனது வீட்டுக்கு வரவழைத்து அவற்றை கவிதாவிடம் ஹிதேஷ் ஜெயின் கொடுத்திருக்கிறார். கவிதாவும், ஹிதேஷும் பாலிய நண்பர்கள்.

அவர்கள் இருவரும் பின்னர் காதலிக்க ஆரம்பித்தனர். கமல்காந்த் சொத்தை முழுமையாக அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில் இரண்டு பேரையும் விஷம் கலந்து கொடுத்து கொலைசெய்திருக்கின்றனர்” என்றார்.