தவிக்கவிட்ட பிள்ளைகள்… 1.5 கோடி மதிப்புள்ள சொத்தை அரசாங்கத்திற்கு எழுதிவைத்த முதியவர்!!

340

உத்தர பிரதேசத்தில்..

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் முதியவர் ஒருவர் தனது மொத்த சொத்தையும் அரசாங்கத்திற்கு உயில் எழுதிவைத்துள்ளார். ஆனால், அவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.

தனது பிள்ளைகளால் கைவிடப்பட்டதால் மனமுடைந்த 85 வயதான நாது சிங் (Nathu Singh), தனது 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை உத்தரபிரதேச அரசுக்கு உயில் செய்துள்ளார்.

அவர் தனது உடலையும் மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்துள்ளார், மேலும் தனது மகன் மற்றும் நான்கு மகள்கள் தனது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

முசாபர்நகரில் வசிக்கும் நாது சிங்குக்கு ரூ1.5 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் நிலம் உள்ளது. அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். பள்ளி ஆசிரியராக பணிபுரியும் அவர் சஹாரன்பூரில் வசிக்கிறார். மற்ற நான்கு பேரும் மகள்கள், அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

மனைவி இறந்ததையடுத்து அந்த முதியவர் தனியாக வசித்து வந்தார். சுமார் 7 மாதங்களுக்கு முன்பு, அவர் தனது கிராமத்தில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்றார்.

குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தன்னைச் சந்திக்க வராததால் மனம் உடைந்த அவர், தனது நிலத்தை மாநில அரசுக்கு உயில் எழுதினர், அவர் இறந்த பிறகு, அங்கு ஒரு பள்ளி அல்லது மருத்துவமனை கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

“இந்த வயதில், நான் என் மகன் மற்றும் மருமகளுடன் வாழ்ந்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் என்னை நன்றாக நடத்தவில்லை. அதனால்தான் சொத்தை மாற்றுவதற்கு நான் முடிவு செய்தேன்” என்று அவர் கூறினார்.

அப்பகுதியின் துணைப் பதிவாளர், நாது சிங்கின் பிரமாணப் பத்திரம் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும், அவரது மரணத்திற்குப் பிறகு அது நடைமுறைக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.