வவுனியாவில் கருங்கல் அகழ்விற்கு பொதுமக்கள் எதிர்ப்பு!!

1072

கதிரவேலர் பூவரசங்குளம்..

வவுனியா ஓமந்தை கதிரவேலர் பூவரசங்குளம் பகுதியில் கருங்கல் அகழ்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள மலைக்குன்று ஒன்றில் கருங்கல் அகழ்வதற்கான அனுமதி தனிநபர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன் தாம் ஆலயமாக வழிபடும் இடத்தில் குறித்த செயற்பாட்டிற்கு வழங்கிய அனுமதியை உடன் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிராம மக்கள்,

குறித்த மலையில் நாம் இறைவழிபாட்டில் ஈடுபட்டுவரும் நிலையில் அதனை பொருட்படுத்தாமல் கருங்கல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மலையில் உள்ள பிள்ளையார் சிலை நேற்றையதினம் சேதமாக்கப்பட்டுள்ளது. இதற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்தபகுதியில் கருங்கல் அகழ்வதால் அருகில் உள்ள குளத்தின் நீர்மட்டமும் குறைவடையும் நிலை காணப்படுகின்றது. எனவே குறித்த விடயங்களை கவனமெடுத்து வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துமாறு அதிகாரிகளிடம் கேட்டுகொள்கின்றோம் என்றனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், மற்றும் பிரதேசசபையின் தவிசாளர் த.யோகராஜா ஆகியோர் பொதுமக்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த இடத்தில் ஆலயவழிபாடு இடம்பெறுவது தொடர்பான தகவல்களை கேட்டறிந்த பிரதேச செயலாளர் இது தொடர்பாக தொல்பொருட் திணைக்களம் மற்றும், சுற்றுச்சூழல் அதிகாரசபைக்கு தெரியப்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.