பல துண்டுகளாக வெட்டப்பட்ட தாய் : 2 மாதங்களாக மறைக்கப்பட்ட உடல் உறுப்புகள்.. விசாரணை வளையத்தில் மகள்!!

293

மும்பை..

மும்பை லால்பாக்கில் நேற்று வீணா ஜெயின் (55) என்ற பெண் கொலைசெய்யப்பட்டு பல துண்டுகளாக வெட்டப்பட்டு வீட்டிலிருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீஸார் வீணாவின் மகள் ரிம்பிள் ஜெயின்(24) என்பவரைக் கைதுசெய்திருக்கின்றனர். வீணாவை அவரின் மகள்தான் கொலை செய்தாரா… அல்லது அவர் இயற்கையாக மரணம் அடைந்தாரா… என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

வீணாவின் சகோதரர் சுரேஷ் போர்வெல் அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவருகிறார். கடந்த சில மாதங்களாக அவரால் வீணாவுடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதால், தன் மனைவியை அனுப்பி வீணாவைப் பார்த்துவிட்டு வரும்படி கேட்டுக்கொண்டார்.

சுரேஷ் மனைவி வந்தபோது ரிம்பிள் ஜெயின் வீட்டுக்குள் விட மறுத்ததோடு, தன் தாயார் கான்பூர் சென்றிருப்பதாகத் தெரிவித்தார். கதவைத் திறக்காததால் சுரேஷ் மனைவி தன் மகனை போன் செய்து வரவழைத்தார். அவரின் மகன் வந்து பலவந்தமாக கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றார்.

ஆனால், வீட்டில் வீணா இல்லை. வீடு அலங்கோலமாகக் கிடந்தது. அதோடு வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்தது. உடனே ரிம்பிள் ஜெயினை அழைத்துக்கொண்டு சுரேஷ் குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்தனர்.

அதோடு, வீட்டில் துர்நாற்றம் இருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸார் வீட்டில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது வீட்டிலிருந்த பீரோவை போலீஸார் திறந்து பார்த்தனர். உள்ளே பெரிய பிளாஸ்டிக் பேக் இருந்தது.

அதில் என்ன இருக்கிறது என்று ரிம்பிள் ஜெயினிடம் கேட்டதற்கு எதுவும் சொல்லவில்லை. அதைத் திறந்தபோது வீணாவின் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு மிகவும் அழுகிய நிலையில் இருந்தது.

வீணாவைப் பல துண்டுகளாக வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மார்பிள் கட்டர், கத்தி போன்றவையும் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீஸ் அதிகாரி பிரவின் முண்டே, “வீணா கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டார்.

அவரின் கீழ் தளத்திலிருந்த உணவக ஊழியர்கள் இரண்டு பேர் வீணாவை வீட்டில் கொண்டுவந்து விட்டுச் சென்றனர். இதில் வீணா படுகாயமடைந்து இறந்தாரா அல்லது வீணாவை ரிம்பிள் கொலைசெய்தாரா அல்லது போலீஸ் விசாரணைக்கு பயந்து இறந்துபோன வீணாவை பல துண்டுகளாக வெட்டி தடயத்தை மறைக்க முயன்றாரா என்ற கோணத்தில் விசாரித்துவருகிறோம்.

ரிம்பிள் நீண்ட நாள்களாகக் குளிக்காமல் இருந்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. அவரிடம் மனநல மருத்துவரின் துணையோடு விசாரித்துவருகிறோம். தற்போது ரிம்பிள் சரியான மனநிலையில் இல்லை. அவர்களது வீட்டிலிருந்து சுமார் இரண்டு மாதமாக துர்நாற்றம் வந்து கொண்டிருந்தது.

ஆனால், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு, அந்த துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் இருந்தனர். ரிம்பிள் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கிறது. அவரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தவிருக்கிறோம். தடயவியல் நிபுணர்களின் துணையோடு விசாரித்துவருகிறோம்.

ரிம்பிள் இரண்டு ஆண் நண்பர்களுடன் போனில் பேசியிருக்கிறார். அவர்கள் வீணாவைப் பல துண்டுகளாக வெட்ட உதவி செய்தார்களா என்ற கோணத்தில் விசாரித்துவருகிறோம்.

வீணாவும், அவரின் மகள் மட்டும் அந்த வீட்டில் வசித்துவந்தனர். அந்த வீட்டுக்கான வாடகையை வீணாவின் சகோதரர் சுரேஷ் போர்வெல்லின் கொடுத்துவந்தார்” என்று தெரிவித்தார்.