திருமணப் பந்தலில் தாய் உயிரிழப்பு… கண்ணீருடன் தாலி கட்டிக் கொண்ட மணமகள்!!

640


கன்னியாகுமரியில்..



கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கீழப்பெருவிளை அய்யாகோவில் பகுதியில் வசித்து வருபவர் சண்முகவேல் . இவர் பி.எஸ்.என்.எல். அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.



இவருடைய மனைவி 51 வயது சாந்தி. இந்த தம்பதிக்கு 3 மகள்கள். இதில் மூத்த மகள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் எள்ளு விளை பகுதியில் வசித்து வரும் இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.




நேற்று மார்ச்27ம் தேதி திங்கட்கிழமை திருமணம் நடக்க இருந்தது. சண்முகவேல் வீட்டில்நேற்று திருமண விழாவிற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. உறவினர்கள் பலர் வந்து வீட்டில் தங்கி இருந்தனர்.


இதில் சண்முகவேலின் மனைவி சாந்தி உறவினர்களை கவனித்துக் கொண்டு அவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். கிரைண்டரில் மாவு அரைக்கும் போது எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு சாந்தி மீது மின்சாரம் பாய்ந்தது.

மயங்கி விழுந்த சாந்தியை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மகளுக்கு திருமணம் நடக்க இருந்த பந்தலில் தாயாரின் உடல் வைக்கப்பட்டதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.


திருமண வீடு சோகத்தில் மூழ்கி இருந்தது. இந்நிலையில் தாயாரின் ஆசைப்படி மகளின் திருமணத்தை திட்டமிட்டபடி நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர். சாந்தியின் உடலை உடனடியாக பிரேத பரிசோதனை செய்து தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஆனால் மாலை 6 மணிக்கு பிறகு பிரேத பரிசோதனை செய்யப்படமாட்டாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். கலெக்டரின் பரிந்துரையின் பேரில் இரவே பிரேத பரிசோதனை முடிந்து சாந்தியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மகளுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் தாயார் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இருந்தபோதிலும் திட்டமிட்ட படி நேற்று காலை நிச்சயித்தபடி அதே சத்திரத்தில் திருமணம் நடத்தப்பட்டது.

தாயார் இல்லாததால் அவர் கண்கலங்கி கதறி அழுதபடி இருந்தார். அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தினார்கள். இந்த காட்சி காண்பவர்களை கரைய வைத்தது. மண்டபத்தில் எளிய முறையில் அதே மாப்பிள்ளையுடன், மணமகளுக்கு திருமணம் நடைபெற்றது. உறவினர்களுடன் கண்ணீருடன் மணமக்களை வாழ்த்தினர்.