இறுதிச் சடங்கு செய்துகொண்டிருந்த மகன்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. உயிருடன் வந்த தந்தை!!

971

உளுந்தூர்பேட்டையில்..

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலித் தொழிலாளியான இவருக்கு 65 வயதாகிறது. இவருக்கு கவுண்டமணி (வயது 30) மற்றும் செந்தில் (வயது 28) என இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். சமீபத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சுப்பிரமணி வீட்டிலிருந்து வெளியேறியதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகிய இருவரும் தங்களது தந்தையை தேடிவந்திருக்கின்றனர். புதுச்சேரியில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு சுப்பிரமணி சென்றிருக்கலாம் என நினைத்த அவருடைய மனைவி மற்றும் மகள் அங்கே சென்றிருக்கின்றனர்.

இதற்கிடையே ள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வயதானவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அடையாளம் தெரியாததால் யாருடைய சடலம் அது என்பதில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த கவுண்டமணி மற்றும் செந்தில் தியாகதுருகம் பகுதிக்கு சென்றிருக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் தங்களுடைய தந்தையுடையது என எண்ணிய இருவரும் அதனை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு திரும்பியிருக்கின்றனர்.

இறுதிச் சடங்குகளுக்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இவர்களுடைய உறவினர் ஒருவர் மாலை வாங்க சென்றிருக்கிறார். அப்போது கடைதெருவில் சுப்பிரமணி நடந்து வந்துகொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

பின்னர் அவரிடத்தில் விபரத்தை கூறவே உடனடியாக சுப்பிரமணி வீட்டுக்கு சென்றிருக்கிறார். இறந்துபோனதாக நினைத்து இறுதி சடங்கை செய்துகொண்டிருந்த மகன்கள் இருவரும் தங்களது தந்தையை கண்டு உறைந்து போயினர்.

இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கே சென்றிருக்கின்றனர். அவர்களிடம் இருந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.