நடிகை குயிலி மீது நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு!!

941

Kuyileமக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நடிகை குயிலிக்கு, தேர்தல் விதி மீறிய வழக்கில் திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் நாகை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை குயிலி கடந்த மார்ச் மாதம் பிரசாரம் செய்துள்ளார்.
ஆனால் அவர் அனுமதி பெற்ற இடத்தை தவிர நகரின் பல பகுதியில் அனுமதியின்றி பிரசாரம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நாகராஜன் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் நடிகை குயிலி, வழக்கறிஞர் அன்பரசன் ஆகிய 2 பேர் மீதும் புகார் செய்தார்.
இதனையடுத்து, திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை நேற்று வந்தபோது, நடிகை குயிலி மற்றும் வழக்கறிஞர் அன்பரசன் ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. இதனையடுத்து நடிகை குயிலி, வழக்கறிஞர் அன்பரசன் ஆகிய இருவருக்கும் நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.