கொழும்பில் மகனின் மோசமான செயலால் பெற்றோரின் விபரீத முடிவு!!

1255

கொழும்பில்..

கொழும்பு, மருதானை பிரதேசத்தில் மகன் தனது சொந்த வியாபாரத்தில் பணத்தை துஷ்பிரயோகம் செய்தமையால் தாயும் தந்தையும் அதிகளவு இன்சுலின் ஊசி செலுத்தி உயிரை மாய்க்க முயற்சித்துள்ளனர்.

கடந்த 12ஆம் திகதி தம்பதியரின் மகளால் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் தந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தம்பதி பல ஆண்டுகளாக சீட்டு மூலம் பணம் மாற்றும் தொழில் செய்து வந்தனர். இரண்டு ரூபாயில் தொடங்கிய இவர்களின் தொழில் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கணவனுக்கு ஏற்பட்ட புற்று நோயினால் பணம் வசூலிக்கும் பொறுப்பு மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐந்து பிள்ளைகளின் தாயான இவர், தனது மகன் ஒருவரை பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சூதாட்டத்திற்கு அதிக அடிமையான மகன், வியாபாரத்தில் கிடைத்த பணத்தை சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக அவர்களின் சீட்டு தொழில் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதுடன் பணம் வழங்கியவர்கள் அதனை கேட்கும் நிலை ஏற்பட்டது. பணம் கேட்டு வீட்டுக்கு வந்தவர்கள், தம்பதியிடம் கடும் வார்த்தைகளால் பேசி, மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மனவிரக்தி அடைந்த இருவரும் கடிதம் எழுதிவிட்டு அதிகளவான இன்சுலினை பயன்படுத்தி உயிரை மாய்க்க முயன்றுள்ளனர். இதனால் கணவர் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி டி.எல்.எம்.சேனநாயக்க, உயிரிழந்தவர் அதிகளவு இன்சுலின் எடுத்துக் கொண்டதால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.