குடும்பத்தகராறில் பினாயில் குடித்த காதலி… அதிர்ச்சியில் காதலன் விபரீத முடிவு!!

708

சென்னையில்..

சென்னையை அடுத்த மறைமலைநகர் கூடலூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞர், பெருங்களத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டுப் படித்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளார்.

இதனிடையே, சூர்யாவின் காதலி, அவரது வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பினாயில் குடித்துத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். எனினும் அவரை உறவினர்கள் மீட்டுச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், காதலி தற்கொலை முயற்சி என்ற தகவலை அறிந்து சூர்யா மன உளைச்சலுக்கு ஆளானார். தன் காதலி இறந்து விடுவாளோ என்ற வேதனையில் தானும் தற்கொலைச் செய்ய முடிவெடுத்து, நேற்று வீட்டில் அவரது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலைச் செய்து கொண்டார்.

வீட்டில் சூர்யாவின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் அங்கு சென்ற போலீசார், தற்கொலை செய்துக் கொண்ட சூர்யாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.