பட்டமளிப்பு விழாவில் “இத வாங்க மகன் உசுரோட இல்லையே” என மேடையிலேயே கதறியழுத பெற்றோர்!!

1952


நாகப்பட்டினத்தில்..



ரொம்ப நல்லா படிச்சான்.. எங்க குடும்பத்திலேயே கல்லூரி வாசப்படியை மிதிச்ச முதல் பையன் அவன் தான். அத்தனை கஷ்டப்பட்டு படிச்சவன், படிப்பு முடிச்ச பட்டத்தை வாங்கறதுக்கு உசுரோட இல்லையே என்று பட்டமளிப்பு விழா மேடையில் பெற்றோர் கதறியழுதது அங்கே கூடியிருந்த மாணவ, மாணவிகளையும் சோகத்தில் ஆழ்த்தியது.



நாகப்பட்டினத்தில் இருக்கும் இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழா, நேற்று மே 1ம் தேதி கல்லூரி வளாகத்திலேயே நடைபெற்றது.



இந்த பட்டமளிப்பு விழாவில் கல்லூரியில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.


இந்நிலையில், கல்லூரியில் பயின்ற தினேஷ் எனும் மாணவருக்கும் பட்டம் அளிக்கப்பட்டது. மாணவர் தினேஷ் தேர்வெழுதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே மரணமடைந்திருந்ததால், அவரது பட்டத்தைப் பெறுவதற்காக தினேஷின் பெற்றோர்கள் வந்திருந்தனர்.


நாகப்பட்டினம் அக்கறைப்பேட்டையில் வசித்து வரும் தினேஷின் பெற்றோர் கண்ணன் மற்றும் செல்வி, மேடையேறி, மகனின் பட்டத்தை வாங்கும் போது, உணர்ச்சிவசப்பட்டவர்களாக கதறியழுதது, அங்கே கூடியிருந்த மாணவ, மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த பட்டத்தை வாங்குவதற்கு மகன் உசுரோட இல்லையே என்று கண்ணீர் வடித்தனர்.

கண்களில் கண்ணீர் தளும்ப தனது மகனுக்கான பட்டத்தினை பெற்றோர்கள் பெற்றுக் கொண்டனர். கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சக மாணவர்களின் பெற்றோர்கள் நெகிழ்ச்சி அடைந்து அரங்கம் அதிர கைதட்டினர்.


கண்ணன், செல்வியின் மகன் தினேஷ் 2021 ம் ஆண்டு மீன் பிடிக்க சென்ற போது, படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.