மதுபானம் கேட்டு அடம் பிடித்த மனைவி… ஆத்திரத்தில் கொன்று புதைத்த கணவன்!!

817

இந்தியாவில்..

இந்தியாவின் மூன்று பக்கமும் கடல் போல தமிழகத்தின் நான்கு பக்கமும் சாராய ஆறு ஓடும் அளவிற்கு டாஸ்மாக் வியாபாரம் செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் மது விற்பனை சாதனைப் படைக்கும் அளவுக்கு டார்க்கெட் நிர்ணயம் செய்து திட்டமிட்டு வருகிறது அரசு.

இது ஏதோ தமிழகத்தில் மட்டும் நிகழ்கிற சம்பவமாக இல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களும் இப்படி ‘குடி’யின் பிடியில் சிக்கி தவிக்கின்றன. இந்நிலையில், சரக்கு வாங்கி தர சொல்லி தகராறு செய்து வந்ததால், ஆத்திரத்தில் இளம்பெண்ணை கணவன் அடித்து கொன்ற சம்பவம் கும்மிடிப்பூண்டி அருகே நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள புட்டிரெட்டிகண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மய்யா (25). இவரது மனைவி லட்சுமி (22). இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான்.

இவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே கரடிபுத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் மாந்தோப்பில் குடும்பத்தோடு தங்கி வேலை செய்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள புட்டிரெட்டிகண்டிகை கிராமத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு தர்மய்யா தனது குழந்தையோடு சென்றார். அப்போது மனைவி லட்சுமி குறித்து தர்மய்யாவிடம் அவரது சகோதரி கேட்ட போது கடந்த 23- தேதி கோபத்தில் மனைவியை அடித்து கொன்று விட்டு, வேலைச் செய்து வந்த மாந்தோப்பிலேயே புதைத்து விட்டதாக தெரிவித்தார்.

இந்த தகவலை கரடிபுத்தூரில் உள்ள மற்றொரு மாந்தோப்பு காவலாளியான சுதா என்பவரிடம் தர்மய்யாவின் சகோதரி தெரிவித்தார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து பாதிரிவேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில், கடந்த 27ம் தேதி பாதிரிவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரீத்தி முன்னிலையில் லட்சுமியின் உடலை மாந்தோப்பில் இருந்து தோண்டி எடுத்தனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான தர்மய்யாவை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் ஆந்திராவில் தர்மய்யாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கணவன்-மனைவி இருவருக்கும் குடி பழக்கம் இருந்ததாகவும், கடந்த 22ம் தேதி மனைவி லட்சுமிக்கு மது வாங்கி கொடுக்காததால் அவர் கோபத்தில் மறுநாள் சமைக்காமல் இருந்ததால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

தகராறில் ஆத்திரமடைந்த தர்மய்யா மண்வெட்டியால் மனைவி லட்சுமியை தாக்கினார். இதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மனைவியை குழி தோண்டி புதைத்ததாக தர்மய்யா தெரிவித்தார். போலீசார் அவரை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைந்தனர்.