அண்மைக்காலமாக பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகளில் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளதோடு இந்த வருடத்தில் மாத்திரம் பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 27 பேர் பலியாகியுள்ளனர்.
பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ஏற்பட்ட விபத்தில் மேலும் இருவர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் நேற்றுக் காலை மீரிகம – அம்பலன்வத்தை பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்றது. சிறிய ரக லொறியொன்றுடன் ரயில் மோதியதில் லொறியில் பயணித்த இருவரும் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 25 ஆம் திகதி அளுத்கமை பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் இறந்ததோடு இந்துருவ கைகாவ ரயில் கடவையில் 26 ஆம் திகதி நடந்த விபத்தில் மற்றொருவர் இறந்தார்.
இந்த நிலையில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் ஏற்படும் விபத்துகளை மட்டுப்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.
நாடு பூராவும் சுமார் 775 பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் கூடுதல் ஆபத்துள்ள அதிக விபத்துக்கள் இடம்பெறும் 200 பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகள் உள்ள இடங்களில் துரிதமாக பாதுகாப்பான ரயில்வே கடவைகளை இட உள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது.
பாதுகாப்பற்ற ரயில் கடவைகளினூடாக வாகனம் செலுத்துகையில் அவதானமாக வாகனம் ஓட்டாததாலும் அதிக விபத்துகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதிகள் கவனமாக செயற்படுவதன் மூலம் ரயில் கடவைகளில் நிகழும் விபத்துகளை மட்டுப்படுத்த முடியும் எனவும் பொலிஸார் கூறினர்.
இந்த வருடத்திலுன் மாத்திரம் இதுவரை 21 விபத்துகள் ரயில் கடவைகளில் பதிவாகியுள்ளன.
இதற்கு முன் ரயில் கடவைகளில் காவலாளிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்பொழுது தன்னிச்சையா- இயங்கும் மணி அடிக்கும் கடவைகள் பொருத்தி வருவதாக ரயில்வே திணைக்களம் கூறியது. புதிதாக ரயில் கடவைகள் பாதுகாப்பு முறையை நிர்மாணிக்க 640 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.