வவுனியாவில் ஊடகவியலாளர்களை கண்டதும் பின் கதவால் வெளியேறிய இராஜாங்க அமைச்சர் : வடக்கு ஆளுனரின் உத்தரவை உதாசீனம் செய்த வவுனியா அரச அதிபர்!!

997

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களைக் கண்டதும் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இருந்து பின் கதவால் கிராமிய இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் வெளியேறிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் கூட்டம் முடிந்து வந்த வடக்கு ஆளுனர், மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவர் ஆகியோரிடம் தம்மை கூட்ட மண்டபத்திற்கு அனுமதிக்காமை தொடர்பில் கேள்வி எழுப்பினர்.

இதனை அவதானித்த கிராமிய இராஜாங்க அமைச்சரின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் தம்மை ஏன் உள்ளே அனுமதிக்கவில்லை என கேள்வி எழுப்புகிறார்கள் என்ற விடயத்தை இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து, கூட்ட மண்டபத்தின் பின் வாசல் பகுதிக்கு தனது வாகனத்தை வரவழைத்து அங்கிருந்து ஊடகவியலாளர்களை சந்திக்காது இராஜாங்க அமைச்சர் தனது சகாக்களுடன் வெளியேறியிருந்தார்.

வடக்கு ஆளுனரின் உத்தரவை உதாசீனம் செய்த வவுனியா அரச அதிபர்!!

வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜாவின் உத்தரவை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர உதாசீனம் செய்த சம்பவம் ஒன்று இன்று (03.05) மாலை வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (03.05) இடம்பெற்றது.

குறித்த கூட்டத்திற்கு வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கூட்டம் முடிந்த பின் 4.30 இற்கு ஊடக சந்திப்பு நடைபெறும் என மேலதிக மாவட்ட அரச அதிபர் தி.திரேஸ்குமாரால் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாலை 4 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மண்டப வாயிலில் காத்திருந்த ஊடகவியலாளர்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இடை நடுவில் வெளியேறிய வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜாவிடம், ஊடக சுதந்திர நாளான இன்று எம்மை ஏன் மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு அனுமதிக்கவில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஆளுனர்,

நீங்கள் கூட்ட மண்டபத்திற்குள் வரவில்லையா. உங்களை அனுமதிக்கவில்லை என எனக்கு தெரியாது. மன்னித்துக் கொள்ளுங்கள். யார் வர வேண்டாம் என கூறியது என ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பிய அவர் நீங்கள் மண்டபத்திநற்கு செல்லுங்கள்.

நான் சொன்னதாக அரச அதிபரிடம் சொல்லுங்கள் எனக் கூறி அங்கு நின்ற இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பிரதிநிதிகளிடம் அரச அதிபரிடம் தெரியப்படுத்துமாறு கூறிவிட்டு சென்றிருந்தார்.

இராஜாங்க அமைச்சரின் பிரதிநிதிகள் குறித்த விடயத்தை அரச அதிபரிடம் தெரியப்படுத்தியும், ஆளுனரின் உத்தரவை கருத்தில் எடுக்காது கதவுகளை பூட்டி ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.