5 திருமணம் செய்து பணம், நகை கொள்ளை.. 6வது கணவரை ஏமாற்ற முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

754

நீலகிரியில்..

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகா மேட்டுப்பாளையம் பகுதியில் பாலகிருஷ்ணன் – மகாலட்சுமி தம்பதி வசித்து வந்தனர். இருவருக்கு திருமணமாகி 17 வயது, 16 வயதில் 2 மகன்களும், 13 வயதில் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் பாலகிருஷ்ணன் உடல்நலமின்றி இறந்தார்.

இதையடுத்து மகாலட்சுமிக்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பாலாஜி என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டு அவரை 2ஆவது திருமணம் செய்துள்ளார். அவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

இந்த நிலையில் இரு குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளை ஒன்றிணைத்து ஊட்டியில் குடும்பம் நடத்தி வந்த மகாலட்சுமி, நாளடைவில் பாலாஜியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 3வதாக ஊட்டியை சேர்ந்த பெயின்டர் மணி என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இவருடன் 3 மாதமே குடும்பம் நடத்திய நிலையில் அவருடனும் பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து 4ஆவதாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த அருள் என்பவருடன் சமூக வலைத்தளத்தின் மூலம் பழகி, தன்னை அனாதை எனக் கூறி அவருடன் குடும்பம் நடத்தியுள்ளார்.

எனினும் சில நாட்களுக்கு பின் பணம், நகையை கொள்ளையடித்து கொண்டு தலைமறைவானார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிந்து மகாலட்சுமியை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டனுடன் முகநூலில் பழகி அறிமுகம் ஆகியுள்ளார். பின்னர் தான் அனாதை என்றும், தனக்கு வாழ்க்கை அளிக்குமாறும் மகாலட்சுமி கூறியுள்ளார்.

அதை நம்பி மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் அப்பெண்ணை அவலூர்பேட்டையில் உள்ள கோயிலுக்கு அழைத்து வந்து திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து சென்றார்.

அவருடன் ஒரு மாதம் மட்டுமே குடும்பம் நடத்திய மகாலட்சுமி, மணிகண்டன் வீட்டிலிருந்து ரூ.1.70 லட்சத்தை எடுத்துக்கொண்டு தப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், மாயமான மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி அவர் வளத்தி போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிந்து மகாலட்சுமியை கடந்த 6 மாதமாக தேடி வந்தனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த சின்ராஜ் என்பவரை 6வதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து வளத்தி போலீசார் நேற்று ஆத்தூர் பகுதிக்கு சென்று சின்ராஜையும், மகாலட்சுமியையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அனைத்து கல்யாண மோசடிகளும் அம்பலமானதால், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.