வற்றாப்பளை..
நாட்டில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தற்போது தமிழ் மக்களின் காணிகள், இந்து ஆலயங்கள் தொல்லியல் திணைக்களங்களினாலும், வன இலக்காக்களினாலும் கைப்பற்றப்பட்டு வருவதுடன், மக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுக்கப்படாமல் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்து ஆலயங்கள் உடைக்கப்படுதல், வரலாற்று ஆலயங்கள் அமைந்துள்ள அமைவிடங்களில் விகாரைகளை கட்டுதல் என இலங்கை இராணுவத்தினரின் சட்டவிரோத நடவடிக்கைகள் என்பன அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு ஆரம்பிக்கும் பிரதேசமான பழைய செம்மலைப் பகுதியில், காலாகாலமாக இருந்துவரும் இந்துக்களின் ஆலயமான பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து அங்கு பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகளைக் கடந்தும் வெடுக்குநாறி மலையின் உச்சியில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் எனும் சிவனுடைய புராதன ஆலயத்தை கையகப்படுத்தும் கைங்கரியத்தை மேற்கொண்டுள்ள இலங்கைத் தொல்லியல் திணைக்களம், இவ்வாலயத்தில் பூஜை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
அதுமாத்திரமன்றி, முல்லைத்தீவு- குருந்தூர் மலை ஆதி ஐயனார் எனும் சிவ ஆலயத்தினை பௌத்த பிக்குகள் சிலர் மலையில் காணப்பட்ட இடிபாடுகளை பார்த்து, “இது எமது பௌத்த வழிபாட்டுக்குரிய இடம்” என கூறி அங்கு இராணுவத்தோடு இணைந்து தொல்பொருள் திணைக்களம் அகழ்வாராய்ச்சிப் பணி என்ற போர்வையில் அவ்விடத்தை பௌத்த மத அடையாளமாக மாற்றம் செய்வதற்காக முனைப்புக்களை மேற்கொண்டுள்ளது.
அத்தோடு உருத்திரபுரம் சிவன் கோவில் ஆக்கிரமிப்பு, மண்ணித்தலை சிவன் கோவில் சர்ச்சை, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை, திருக்கோணேஸ்வரர் ஆலய நில ஆக்கிரமிப்பு, கின்னியாய் வெந்நீரூற்று, கங்குவேலி பத்தினி அம்மன் ஆலய ஆக்கிரமிப்பு, மூதூர் மலையடிப் பிள்ளையார் ஆலயம், திரியாய் காணி அபகரிப்பு, கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியமை என இந்து, கிறிஸ்தவ ஆலயங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க தமிழ் மக்களின் மதவழிபாடுகளை பேணும் பௌத்த மக்கள் எம்மத்தில் இருக்கவே செய்கின்றனர்.
தமிழ் மக்களின் சமய வழிப்பாட்டு நெறிமுறைகளையும், ஆன்மீக வழிபாடுகளையும் பின்பற்றும் சகோதர மொழி பேசும் மக்கள் தொன்றுதொட்டு எம்மத்தில் இருப்பதை காணலாம்.
இலங்கையில் பல சிவ ஆலயங்கள், அம்மன் ஆலயங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்ற போதிலும், வற்றாப்பளை அம்மன் ஆலயம் தேசத்துக்கோயிலாகப் பெருந்தொகையான பக்தர்களை ஈர்ப்பது என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று.
முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயம் தமிழ் மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் அமைகின்றது. மிகவும் சக்தி வாய்ந்த இந்த ஆலயத்தில் தமிழ் மக்கள் மாத்திரமன்றி சகோதர மொழி பேசும் மக்களும் இந்த ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபடுவதை காணலாம்.
ஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவியமை பற்றிய சில தகவல்களை ராஜாவலிய, ராஜரத்நாகர என்னும் சிங்கள வரலாற்று நூல்களில் எடுத்துக்கூறப்பட்டுள்ளன. இலங்கையில் சைவத் தமிழ் மக்கள் மாத்திரமன்றிப் பௌத்த சிங்கள மக்களும் பத்தினித் தெய்வத்தை வழிபடுகின்றனர்.
பௌத்த ஆலயங்களில் பத்தினித் தெய்யோ என்னும் பெயரால் கண்ணகி அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது. கண்டியில் தற்போது புத்தபெருமானின் புனித தந்தத்திற்கு எடுக்கப்படும் பெரகரா ஆரம்பத்தில் பத்தினித் தெய்வத்திற்கு எடுக்கப்பட்ட விழாவென்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வரலாற்று கதைகளை எடுத்து நோக்கும் போது, இடைச்சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மூதாட்டி ஒருவர் அங்கு வந்து தனக்குப் பசிக்கிறது என்று சொல்ல சிறுவர்கள் பாற்புக்கை சமைத்துக் கொடுத்துள்ளனர்.
பின்னர் மாலைஆகிவிட்டதால் விளக்கேற்றுமாறு மூதாட்டி கூறிய போது எண்ணெய் இல்லையெனச் சிறுவர்கள் கூறியுள்ளனர். அதனை கேட்ட மூதாட்டி கடல்நீரை அள்ளி எடுத்து விளக்கேற்றுமாறு கூறியுள்ளார்.. அங்ஙனமே அவர்கள் விளக்கேற்றியுள்ளனர். பின்னர் தனது தலையில் பேன் பார்க்குமாறு மூதாட்டி கேட்க சிறுவர்கள் பார்த்த போது தலையில் ஆயிரம் கண்கள் தென்பட சிறுவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
இதன்போது திடீரென மூதாட்டி மறைந்த பிறகு வைகாசி மாதம் வருவேன் ஒரு திங்கள் என அசரீரி ஒலித்துள்ளது. இடைச்சிறுவர்கள் இதனை முதியோருக்கு அறிவிக்க முதலில் அதனை நம்பாத நிலையில், மூதாட்டி இருந்த வேப்பம்படவாள் தளிர் வந்திருப்பதைக் கண்டு அந்த இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபாடு செய்தனர்.
வைகாசி மாதத்துப் பூரணையை அண்டிய திங்கட்கிழமை பொங்கல் செய்தனர். அயல் கிராமத்து மக்களும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனர். வழிபாடு தொடர்ந்த அக்காலத்தில் உயர் வேளாண்குலத்தைச் சேர்ந்த ஒருவரே பூசகராக இருந்தார்.
இப்படி பல வரலாற்று சிறப்புக்களை கொண்ட வற்றாப்பளை அம்மன் ஆலயம் தமிழ் மக்கள் மாத்திரமன்றி பௌத்த மக்கள் என அனைவரும் வழிபடும் தேசத்துக்கோயிலாகப் பெருந்தொகையான பக்தர்களை ஈர்ப்பது சிறப்பம்சமாகும்.
தமிழ் இநது ஆலயங்களை அக்கிரமிக்கும் நடவடிக்கைகள் ஒருபுறம் அரங்கேறினாலும், தமிழ் மக்கள் மாத்திரம் அன்றி சிங்கள மக்கள் மாத்திரமன்றி இராணுவத்தினரும் முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தில் நம்பிக்கையோடு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மையாகும்.