
பொகவந்தலாவ கெம்பியன் பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், காயமடைந்த மாணவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடுமையாகக் காயமடைந்துள்ள 10 மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொகவந்தலாவ, கெம்பியன் பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று இன்று (28) காலை 7.40 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ – பலாங்கொடை பிரதான வீதியின் கொட்டியகலை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கெம்பியன் பகுதியிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த இப்பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சுமார் 34 மாணவர்கள் காயமடைந்து பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சில மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




