சுற்றுலா சென்ற மாணவிக்கு பெற்றோர் கண்முன்னே நேர்ந்த பரிதாபம்!!

1316

சென்னையில்..

சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகரில் வசித்து வரும் நிக்ஸன் (47) – கிருஷ்ணமாலா தம்பதிக்கு பெமினா (15) என்ற மகளும், டெலான் ஆண்டர்சன் என்ற மகனும் உள்ளனர்.

பெமினா சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், மகள், மகனுடன் சுற்றுலா செல்ல முடிவு செய்தார்.

அதன்படி நிக்ஸன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு காரில் சுற்றுலா சென்றார். அங்கு அருவியை சுற்றியுள்ள இடங்களை சுற்றிபார்த்து இயற்கை அழகை கண்டுவியந்தனர்.

புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் ஆனந்தமாய் குளித்தனர். இதைத்தொடர்ந்து பெமினா உள்பட அனைவரும் அருவியில் இருந்து, கார் நின்ற இடத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.

வென்னியாறு பாலம் அருகே அவர்கள் நடந்துசென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த மரத்தில் இருந்த பெரிய கிளை ஒன்று, திடீரென முறிந்து பெமினாவின் தலையில் விழுந்தது.

இதனால் அவரது தலையில் பெரும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது. பின்னர் சிறிது நேரத்திலேயே அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்தச்சம்பவம் மற்ற சுற்றுலா பயணிகளையும் சோகத்தில் ஆழ்த்தியது. தங்களின் கண் எதிரே மகளுக்கு நேர்ந்த இந்த கதியை பார்த்து, பெற்றோர்கள் இருவரும் கதறி துடித்தனர்.