பிரித்தானியாவின் புதிய விசா நடைமுறைக்கு இலங்கை கண்டனம்..!

593

பிரித்தானியாவிற்கு செல்ல விண்ணப்பிப்பவர்கள், 3000 பவுண்ட்களை வைப்புச் செய்யவேண்டும் என்ற பிரித்தானிய அரசின் திட்டத்திற்கு இலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ராங்கினுக்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.

எனினும் இது தற்காலிக நடைமுறை எனவும், அதிக அவதானத்திற்குறிய நபர்களுக்கு மட்டுமே எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தாக கருணாதிலக்க அமுனுகம சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நைஜீரியா மற்றும் கானா ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த, அதிக அவதானத்திற்குரிய நபர்களுக்கு பிரித்தானியாவில் உட்செல்ல 3000 பவுண்ட்கள் செலுத்த வேண்டும் என பிரித்தானிய அரசு முன்மொழிந்திருந்தது.

இதன்படி பிரித்தானியா செல்ல விசாவிற்கு விண்ணப்பிக்கும் குறித்த நாடுகளில் அதிக அவதானத்திற்குரிய நபர்கள் 3000 ஸ்ரேலிங் பவுண்ட்கள் செலுத்த வேண்டும் என்ற யோசனை இவ்வருடம் நவம்பர் மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேலும் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடாமல் மீளத்திரும்பும் நபர்களுக்கு இந்தப் பணம் மீளளிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வருடத்திற்கு 30,000 – 35,000 இலங்கையர்கள் குறிப்பாக மாணவர்கள் பிரித்தானிய விசாவிற்கு விண்ணப்பிப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தகவல் வெளியிட்டுள்ளது.