10 ம் வகுப்பு மாணவர் எடுத்த விபரீத முடிவு.. கதறும் குடும்பம்!!

1149

காரைக்காலில்..

தமிழகம் , புதுச்சேரி, காரைக்காலில் இன்று 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏப்ரலில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி, காரைக்காலில் சுமார் 7797 மாணவர்களும், 7618 மாணவிகள் என மொத்தம் 15 415 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 13 738 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் 6700 மாணவர்களும், 7038 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.12 சதவீதம். புதுச்சேரி, காரைக்காலில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 78.92 ஆகும்.

கடந்த ஆண்டை விட 3.8% தேர்ச்சி விகிதம் குறைவு. இந்நிலையில், காரைக்காலில் 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காரைக்கால் மாவட்டம் எம்ஜிஆர் நகரில் வசித்து வருபவர் ஓட்டுநர் ஐயப்பன். இவரது மகன் ராகவன், இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில் ராகவன் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டார்.

ஏற்கனவே தேர்வு சரியாக எழுதவில்லை என கூறி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தார். மாணவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காரைக்கால் போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவன் ராகவன் உடலை பார்த்து பெற்றோர், கதறி அழுதனர்.

பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதன்படி, பொதுத்தேர்வில் மாணவர்கள் 88.16%, மாணவிகள் 94.66% தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

தவிர, பள்ளிகளில் மாணவர்கள் கொடுத்திருக்கும் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.