கோர விபத்து.. அடுத்தடுத்து மோதிய ரயில்கள்… 261 பேர் பலி… 900 பேர் படுகாயம்!!

396

சென்னையில்..

நேற்று அடுத்தடுத்து மூன்று ரயில்கள் தொடர்ந்து மோதிக் கொண்டதில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 261 ஆக உயர்ந்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களுக்கு உதவும் வகையில் மூன்று ரயில்கள் மருத்துவ உபகரணங்களுடன் ஒடிசா விரைகிறது. மீட்பு பணிகள் ட் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.

நேற்று வழக்கம் போல கொல்கத்தாவில் இருந்து, மேற்கு வங்கம்- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இடையே தினசரி இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.

அப்போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென, தண்டவாளத்தில் இருந்து வெளியேறி, பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதாக தெரிகிறது.

இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தது விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்று அறியப்பட்டிருக்கிறது. இந்த பயங்கர விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள் துரதிர்ஷ்டவசமாக தடம் புரண்டன.

புவனேஷ்வரில் இருந்து 21 கி.மீ தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வனப்பகுதியில் இந்த விபத்து நடைப்பெற்றதால் மீட்புப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

சரக்கு ரயிலுடன் மோதி நின்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கர விபத்தை ஏற்படுத்திய நிலையில், சற்று நேரத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு ரயிலும், தண்டவாளத்தில் விழுந்து கிடந்த இந்த இரு ரயில்களின் மீது மோதியதில், அந்த ரயிலும் விபத்தில் சிக்கியது.

இந்த கோர விபத்தில் 261 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்துக்கு உடனடியாக 50 ஆம்புலன்ஸ்கள் விரைந்து சென்று மீட்பு பணிகள் நடைப்பெற்றன. விபத்து நடந்த இடத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர். தமிழ்நாடு, ஒடிசா, ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அவசரகால கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, அவசர கட்டுப்பாட்டு அறை எண், +91 6782 262 286, அவசரகால கட்டுப்பாட்டு அறை எண் (பாலசோர்) +91 6782 262 286 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தைத் தொடர்ந்து இன்று கருணாநிதி பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியும், போக்குவரத்து துறை அமைச்சரும் ஒடிசா விரைந்துள்ளனர்.