உத்தராகண்டில் இன்னும் 3,000 பேர் சிக்கியுள்ளனர்: இராணுவத் தளபதி..!

549

வட இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் மழைவெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கியவர்களில் மேலும் 3,000 பேர் வரையில் இன்னும் வெளிவர முடியாமல் மாட்டிக்கொண்டிருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அங்கு இதுவரை 800 பேர்வரையில் உயிரிழந்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் மீட்பு நடவடிக்கைகளை ஆராய்வதற்காக சென்றுள்ள இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங், பெரும்பாலானவர்கள் பத்ரிநாத் கோவில் நகரிலேயே சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்களின் எண்ணிக்கை 350 ஆக இருக்கலாம் என்று முன்னர் ஊகிக்கப்பட்டதற்கு மாறாக, அந்த எண்ணிக்கை 3,000 வரை இருக்கலாம் என்று மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்பு நிவாரண முகாம்களில் நோய் பரவும் அபாயம் இருப்பதாக தொண்டு நிறுவனங்கள் எச்சரித்திருந்த நிலையில், மேலும் 43 சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளன.

இந்த அழிவில் மாட்டிக்கொண்டவர்களில் இதுவரை ஒரு லட்சம் பேர் வரையில் மீட்புப் பணியாளர்களால் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

மலைப்பகுதிகளுக்குள் சிக்கிக்கொண்டு தவிக்கும் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைத் தேடி விமானப்படையினர் தொடர்ந்தும் ஹெலிகொப்டர்கள் மூலம் அங்கு சென்றுவருகின்றனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை உத்தராகண்ட் சென்ற இந்திய இராணுவத்தளபதி ஜெனரல் பிக்ரம் சிங், கேதார்நாத் கோவில் நகரில் சிக்கியிருந்த எல்லோரும் மீட்கப்பட்டுவிட்டதாகவும், 500 பேர்வரையில் தற்போது மீட்கப்பட்டுவருவதாக ஹார்சில் பகுதியிலிருந்து தகவல் வந்துள்ளதாகவும், மேலும் 2,500 பேர்வரையில் பத்ரிநாத் கோவில் நகரில் சிக்கியிருப்பதாகவும் கூறினார்.

காலநிலை ஒத்துழைத்தால் அவர்களும் விரைவில் மீட்கப்பட்டுவிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.