தூக்கம் குறைவா உங்கள் உயிருக்கு ஆபத்து : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

344

Sleeping

தூக்கமின்மை தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு தகவல் வெளியிட்டு வருகின்றனர் விஞ்ஞானிகள். அந்த வகையில் தூக்கமின்மை தொடர்பாக மனிதர்களிடம் பெரும் அலட்சியப் போக்கு காணப்படுகிறது, அது அவர்களின் உயிருக்கே உலை வைக்கக்கூடிய ஆபத்தாக உருமாறியிருப்பதாக சர்வதேச ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், ஹெவாட், மன்செஸ்டர் மற்றும் சர்ரே பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள்தான் இந்தக் கூட்டு எச்சரிக்கையை விடுத்திருப்பவர்கள்.

மனித உடலின் இயற்கையான செயல்பாடான தூக்கம் மற்றும் விழிப்புத்தன்மையை கட்டுப்படுத்தும் மனித உடலியக்கச் செயல்பாட்டு கண்காணிப்புத்தன்மையை ‘உடல் கடிகாரம்’ என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.

கண்ணுக்குத் தெரியாத, ஆனால் மனித உடலின் அடிப்படைத் தேவையான தூக்கம் மற்றும் விழிப்புத்தன்மையை கட்டுப்படுத்தும் இந்த மனித உடல் கடிகாரம் என்பது சுமார் 400 கோடி ஆண்டுகளாக படிப்படியாக உருவான ஒன்று என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஒருநாளின் 24 மணி நேரத்தில் சராசரியாக வெளிச்சமாக இருக்கும் பகல் 12 மணி நேரத்தில் மனித உடல் விழிப்புடனும் துடிப்புடனும் இருப்பதும், வெளிச்சமற்ற 12 மணி நேரமான இரவில் மனித உடல் உறக்கம் கொள்வதுமான நடைமுறை என்பது இன்று நேற்று உருவானதல்ல. அது இன்றைய மனித உடல் உருவாகக் காரணமாக அமைந்த சுமார் 400 கோடி ஆண்டு பரிணாம வளர்ச்சியில் படிப்படியாக உருவாகி மனித உடலுக்குப் பழகிய ஒன்று என்கிறார், ஒக்ஸ்போட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரஸ்ஸல் பாஸ்டர்.

இப்படி பல கோடி ஆண்டுகளின் பரிணாமத்தை தன்னுள் கொண்டு அதற்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டு வளர்ந்திருக்கும் இன்றைய மனித உடலின் கடிகாரச் செயல்பாட்டில் தற்போது மிகப்பெரிய இடையூறு ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார் அவர்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் தூங்கிய சராசரி நேரத்தைவிட, இன்றைய மனிதர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் குறைவாக தூங்குவதாகக் கூறும் அவர், இந்த குறைவான தூக்கம் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக எச்சரிக்கிறார்.

தூக்கமின்மை என்பது வெறும் இரவு நேரப்பணியில் ஈடுபடுபவர்களை மட்டும் பாதிக்கும் பிரச்சினை அல்ல என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள். இன்றைய நிலையில் இது ஒட்டுமொத்தமாக மனிதர்கள் அனைவரையும் பாதிக்கிறது என்றும், தொழில்நுட்பம் இதில் முக்கியக் காரணியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறார்கள் அவர்கள்.

குறிப்பாக, குறிப்பிட்ட ரக மின்சார விளக்குகளின், நீலநிறம் அதிகமுள்ள வெளிச்சமும், தொடுதிரைக் கணினி மற்றும் தொடுதிரை செல்பேசிகளின் திரைகளில் இருந்து வெளியாகும் நீலம் கலந்த வெண்மையான வெளிச்சமும் மனிதக் கண்களில் தொடர்ந்து மணிக்கணக்கில் படும்போது தூக்கம் பெருமளவு பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

அதன் விளைவாக மேற்கத்திய நாடுகளில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் கூட தங்களின் தாத்தா, பாட்டிகளின் தூக்க மாத்திரைகளை சாப்பிடும் அவல நிலை ஏற்பட்டிருப்பதாகவும் இந்த விஞ்ஞானிகள் கவலையுடன் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இப்படி முறையான, போதுமான தூக்கமில்லாமல் இருப்பதன் காரணமாக இதயநோய், நீரிழிவு நோய், உடல் பருமன், தொற்றுநோய்கள் மட்டுமல்ல, புற்றுநோய்கூட ஏற்படலாம் என்பது விஞ்ஞானிகளின் எச்சரிக்கை.

எனவே இரவு நேரத்தில் தொடுதிரைக் கணனி அல்லது தொடுதிரை செல்பேசி திரைகளில் மணிக்கணக்கில் பார்க்கும் பழக்கத்தையும், வீடுகளின் மின்விளக்குகளில் கூடுதல் நீலநிற வெண்மையை வெளியிடும் விளக்கு வெளிச்சத்தில் இருப்பதை தவிர்க்கும் படியும் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் அலட்சியம் ஆபத்தையே தரும் என்பது அவர்களின்.